Sport
முதல்வர் கோப்பை விளையாட்டு குழு போட்டியில் மாணவர்கள் அசத்தல்
விழுப்புரம்: விழுப்புரத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டில் குழு போட்டிகளில் பள்ளி மாணவர்கள் திறனை வெளிப்படுத்தினர்.
விழுப்புரத்தில், இந்தாண்டுக்கான மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி தொடங்கி நடந்து வருகிறது.
நேற்று பள்ளி மாணவர்களுக்கான குழு விளையாட்டு போட்டி நடந்தது. விழுப்புரம் பெருந்திட்ட வளாக உள் விளையாட்டு அரங்கில், இறகுப்பந்து போட்டி நடந்தது.
இதில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மாணவர்களிடையே விறுவிறுப்பான போட்டிகள் பரபரப்பாக நடந்தன.
பேட்மின்டன் ஒற்றையர் பிரிவு, இரட்டையர் பிரிவுகளில், 10 வயது, 14 வயது, 16 வயது, 19 வயதுக்குட்பட்டோர் என தனித்தனியாக போட்டிகள் நடந்தன.
மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன், இறகுப்பந்தாட்டக் கழக செயலாளர் பாபு, இணை செயலர் பார்த்தசாரதி, பயிற்றுனர் விஜய் உள்ளிட்ட குழுவினர் போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.
இதேபோல், பெருந்திட்டவளாக அரசு நீச்சல் குளத்தில், பள்ளி மாணவர்களுக்கான நீச்சல் போட்டிகள் நடந்தன. 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பேக் ஸ்ட்ரோக், பிரண்ட் ஸ்ட்ரோக், பிரீ ஸ்டைல், பட்டர்பிளை, தனிநபர் நீச்சல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ், நீச்சல் போட்டிகள் நடந்தன.
மாணவர்கள் போட்டி போட்டு நீச்சல் போட்டியில் திறனை வெளிப்படுத்தி அசத்தினர். இதே போல், விழுப்புரம் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களுக்கான கூடைப்பந்து, கைப்பந்து, கபடி போட்டிகள் நடந்தன.