Politics
‘தந்தையாக பெருமைப்பட்ட நேரம்’ – முதலமைச்சர் விஜய் குறித்து எஸ்.ஏ. சந்திரசேகர் இன்ஸ்டாவில் பதிவு

முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் இன்று உரையாற்றிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
எத்தனை அழுத்தங்கள் இருந்தாலும், அதை எளிதாகக் கையாளும் முதல்வரை சந்தித்தது, ஒரு தந்தையாகப் பெருமைப்பட்ட நேரம் என்று முதலமைச்சர் விஜய்யை சந்தித்தது குறித்து அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பெருமிதத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் நிறைவு பெற்றுள்ள சூழலில் முதலமைச்சர் விஜய் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு இன்று பதில் அளித்து பேசினார்.
அப்போது, 1967ல்அண்ணா, 1977ல் எம்ஜிஆர், 1983ல் என்டிஆர், 2026ல் விஜய். இயற்கையும் இறைவனும் நம்ம பக்கம் தான் இருப்பார்கள். அன்புக்கு முன்னாடி அவர்கள் தோற்பது உறுதி உறுதி உறுதி. நாற்காலிக்காக அதிகாரத்திற்காக நான் இங்கு வரவில்லை. மக்களுக்கு நல்லது செய்யவும், நன்றி கடன் செய்யவும் மட்டுமே வந்துள்ளேன்.
ஊழல் செய்வோர் தான் ஆதாரம் கேட்பர், ஊழலே செய்யாதோர் அமைதியாக இருப்பார்கள். கரூர் கேங்க் என்று என்னவொரு சூப்பர் பெயர் பாருங்களேன், கரூர் கேங்க் தலைவர் யார் என்று தெரிந்துக்கொள்ள மக்கள் ஆவலாக உள்ளனர்.
திமுக இருக்கும் இடத்தில் தான் தவறு நடக்கும், தவறு நடக்கும் இடத்தில் தான் திமுக இருக்கும். அம்மா மினி கிளினிக், தாலிக்கு தங்கம், அம்மா பைக், ஆடு மாடு வழங்கும் திட்டம் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது.
தவெக ஆட்சியில் ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆளுங்கட்சியினர் தொடர்புடைய வழக்கில் காலதாமதம், திமுக நிர்வாகிகள் காப்பாற்றப்பட்டது என பெரிய பட்டியல் உள்ளது.
என்று பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு காணப்பட்டது. தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு சட்டமன்றத்திற்கு வெளியே பேட்டி அளித்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார்.
இந்த நிலையில் முதலமைச்சர் விஜய்யை சந்தித்துள்ள இயக்குனரும் அவரது தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் இன்ஸ்டாகிராமில் எத்தனை அழுத்தங்கள் இருந்தாலும், அதை எளிதாகக் கையாளும் முதல்வரை சந்தித்தது, ஒரு தந்தையாகப் பெருமைப்பட்ட நேரம் என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்த இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
