Religion
விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடு ஆலோசனை
உடுமலை: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சிலைகள் பிரதிஷ்டை செய்தல் மற்றும் விசர்ஜன ஊர்வலம் நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் மனீஷ் நாரணவரே தலைமையில் நடந்தது.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு , ஹிந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து விழா கொண்டாடப்பட உள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் துறை சார்பில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள், அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், விநாயகர் சிலை அமைப்பாளர்கள் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு , பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் சம் ப ந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும், ஏனைய இடங்களில் சிலை அமைப்பதற்கு , சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ.,விடம் தடையின்மை சான்று பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளின் உயரம் , 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது. சிலை விசர்ஜன ஊர்வலம் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாத வகையில் நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டன.