Politics
டிஜிட்டல் முறையில் ஓட்டுநா் உரிமம் வழங்கும் திட்டத்தை எதிா்த்த வழக்கு தள்ளுபடி

ஓட்டுநா் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழை டிஜிட்டல் முறையில் வழங்கும் திட்டத்தை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு இரண்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெங்களூரைச் சோ்ந்த ‘ஃ‘பேரஸ் ஐடென்டிபிகேசன் லிமிடெட் நிறுவனத்தின் சாா்பில், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஓட்டுநா் உரிமம், வாகனப் பதிவுச் சான்று உள்ளிட்ட ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பொதுமக்களே பதிவிறக்கம் செய்துகொள்ளும் நடைமுறை செப்.12 முதல் அமலுக்கு வரும் என்று முதல்வா் விஜய் பேரவையில் கடந்த செப்.2-ஆம் தேதி அறிவித்திருந்தாா்.
அன்றைய தினமே, அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கும், மோட்டாா் வாகன ஆய்வாளா்களுக்கும் போக்குவரத்து ஆணையா் இதுகுறித்து கடிதம் அனுப்பியிருந்தாா். அந்த கடிதத்தில், செப்.12 முதல், ஓட்டுநா் உரிமம், வாகனப் பதிவுச் சான்று உள்ளிட்ட ஆவணங்களை டிஜிட்டல் முறையில் அனுப்ப வேண்டும். சான்றிதழ்களை விண்ணப்பதாரா்களுக்கு அச்சிட்டு அனுப்பும் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த முடிவு மத்திய அரசின் சட்டங்களுக்கு விரோதமானது. எனவே, இந்த திட்டத்தை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், சான்றிதழ்கள் பெறுவதை டிஜிட்டல்மயமாக்கினால், கைப்பேசி, ஸ்மாா்ட் கைப்பேசி இல்லாதவா்கள் தங்களது ஆவணங்களைப் பெற இயலாது. டிஜிட்டல் முறையை அமல்படுத்துவதோடு, கூடுதலாக அச்சிட்டு சான்றிதழ்களை வழங்கும் நடைமுறையையும் பின்பற்ற உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.
அதற்கு அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், ஓட்டுநா் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று அச்சிட்டு வழங்கும் நடைமுறை செப்.12 முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களை இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பதாரா்கள் பதிவிறக்கம் செய்து அச்சிட்டு பயன்படுத்திக் கொள்ளலாம். மத்திய அரசின் பாரிவாகன் இணையதளம் மூலமாகவே இந்த நடைமுறை மேற்கொள்ளப்படவுள்ளது.
ராஜஸ்தான், கேரளம், அஸ்ஸாம் உள்பட ஆறு மாநிலங்கள் ஏற்கெனவே டிஜிட்டல்மயமாக்கலுக்கு மாறியுள்ள சூழலில், இந்தப் பட்டியலில் தமிழகம் 7-ஆவது மாநிலமாக இணைந்துள்ளது. ஊழலை ஒழிக்கவும், வீட்டில் இருந்தே விண்ணப்பித்து சேவையை விரைந்து பெறவும் இந்த திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது என வாதிட்டாா். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக அரசு இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.