Sport
ஏமாற்றம்! மாவட்ட விளையாட்டு போட்டி ஒத்திவைப்பு வீரர், வீராங்கனையர் திரும்பி சென்ற அவலம்

திருப்பூர்: திருப்பூரில் நேற்று துவங்கவிருந்த முதல்வர் கோப்பை மாவட்ட விளையாட்டு போட்டிகள், தேர்தல் நடத்தை விதிமுறையை காரணம் காட்டி கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டதால், களமாட வந்த வீரர், வீராங்கனையர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
திருப்பூர் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் செப்.9 முதல் 20 வரை நடைபெற இருந்த போட்டியில் பங்கேற்க, 32,981 பள்ளி மாணவ, மாணவியர் பதிவு செய்திருந்தனர். நேற்று காலை 8:00 மணிக்கு போட்டி துவங்க ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வீரர், வீராங்கனையர் அதிகாலையிலேயே வந்தனர்.
சிலர் ‘வார்ம்அப்’ முடித்து தயாராக இருந்த நிலையில், காலை 7:30 மணிக்கு அனைத்து போட்டிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் வீரர்கள் ஏமாற்றம் அடைந்ததுடன், 150-க்கும் மேற்பட்டோருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காலை உணவும் வீணானது.
என்ன காரணம்?
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் அக். 6-ம் தேதி நடைபெற உள்ளதால், இந்திய தேர்தல் கமிஷனின் புதிய வழிகாட்டுதல்படி திருப்பூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக கலெக்டர் மனீஷ் நாரணவரே தெரிவித்துள்ளார்.
காலாண்டு தேர்வு மற்றும் தொடர் விடுமுறையை கருத்தில் கொண்டு, ஒரு மாதம் வரை போட்டிகளை நடத்த ஏற்கனவே அட்டவணை தயாரித்து வீரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதால், முதல்வர் கோப்பை போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் எழுந்துள்ளது.