Health
மருந்து கடைகளில் ‘சிசிடிவி’ கேமராக்கள் கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு
புதுடில்லி: டாக்டர்களின் பரிந்துரை தேவைப்படும் மருந்துகளின் கண்காணிப்பை வலுப்படுத்தும் நோக்கில், மருந்து கடைகளில், ‘சிசிடிவி’ எனப்படும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டாக்டர்களின் அதிகாரப்பூர்வ மருந்து சீட்டு இன்றி, போதை பழக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றும் உயிருக்கு ஆபத்தான மருந்துகள் சட்டவிரோதமாக விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதைத் தடுக்க, மருந்துகள் விதியில் சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
போதை பழக்கத்திற்கு ஆளாகும் இளைஞர்கள் மற்றும் சிறார்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், மருந்து வினியோகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் இந்த விதிகள் கொண்டு வரப்படுகின்றன.
இதன்படி, சில்லரை மருந்து விற்பனை கடைகளில் டாக்டரின் மருந்து சீட்டு மூலம் வழங்கப்படும் மருந்துகள் அனைத்தும் கண்காணிப்பு கேமராவின் நேரடி கண்காணிப்பு எல்லைக்குள்ளேயே வாடிக்கையாளர்களுக்கு வினியோகிக்க வேண்டும் என்ற நிலை ஏற்படும்.
அவ்வாறு, கேமராவில் பதிவாகும் காட்சிகளை மருந்துக்கடை உரிமையாளர்கள், தங்களின் கணினி அல்லது ஸ்டோரேஜ்களில் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். சுகாதாரத்துறை அதிகாரிகள், எப்போது வேண்டுமானாலும் இந்த பதிவுகளை ஆய்வு செய்யவும் இந்த சட்டத்திருத்தம் வழிவகை செய்யும்.
டாக்டரின் மருந்துச் சீட்டு இன்றி நேரடியாக பெறப்படும் மருந்துகள், மனநல பாதிப்புகளுக்கான மருந்துகள் உள்ளிட்டவை தவறாகப் பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளதால், இதுபோன்ற மருந்துகளின் விற்பனையை துல்லியமாக சரிபார்க்க இந்தத் தரவுகள் உதவும் எனவும் கூறப்படுகிறது. இந்த விதிமுறை, பொதுமக்களுக்கு நேரடியாக மருந்துகளை வழங்கும் மருந்து கடைகளுக்கு மட்டுமே பொருந்தும். மொத்த மருந்து விற்பனை செய்யும் வினியோகஸ்தர்களுக்கு இந்த சட்டத்திருத்தத்தில் விலக்கு அளிக்கப்படும்.
இந்த சட்டத் திருத்தம் குறித்து பொதுமக்கள், மருந்தக கூட்டமைப்பினர் தங்களின் கருத்துகளையும் ஆட்சேபனைகளையும் தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு பெறப்படும் கருத்துக்களை பரிசீலித்த பின், இந்த சட்டம் இறுதி செய்யப்பட்டு நாடு முழுதும் அமலுக்கு வரும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.