Politics
பாசனத்துக்காக கல்லணையில் தண்ணீர் திறப்பு

தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டங்களில், சாகுபடிக்கு தேவையான தண்ணீரை, கல்லணையிலிருந்து அமைச்சர்கள் நேற்று திறந்து வைத்தனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில், பாசனத்திற்காக மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர், நேற்று முன்தினம், தஞ்சாவூர் மாவட்ட எல்லையான கல்லணைக்கு வந்தது.
வேளாண் துறை அமைச்சர் வினோத், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் ஆகியோர் காவிரி வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் தண்ணீரை திறந்து வைத்தனர்.
காவிரி, வெண்ணாற்றில் வினாடிக்கு தலா, 1,000 கன அடியும், கல்லணை கால்வாய், கொள்ளிடத்தில் தலா, 500 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டு, படிப்படியாக தண்ணீர் திறப்பு அளவு உயர்த்தப்படவுள்ளது.
அமைச்சர் வினோத் கூறுகையில், ''கடைமடை பகுதிக்கு மூன்று நாட்களில் தண்ணீர் சென்றுவிடும். நீர்வரத்துக்கு ஏற்றார்போல் கூடுதல் தண்ணீர் திறக்கப்படும்,'' என்றார்.