Religion
விநாயகர் விசர்ஜன ஊர்வலப் பாதை சீரமைக்க ஹிந்து அமைப்பு எதிர்பார்ப்பு
திருப்பூர், செப். 11– ஹிந்து முன்னணி, ஹிந்து மக்கள் கட்சி, விஷ்வ ஹிந்து பரிஷத், சிவசேனா உள்ளிட்ட பல்வேறு
ஹிந்து முன்னணி, ஹிந்து மக்கள் கட்சி, விஷ்வ ஹிந்து பரிஷத், சிவசேனா உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்புகள் சார்பில், திருப்பூர் நகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள், 14ம் தேதி பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. 15, 16 மற்றும் 17ம் தேதிகளில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடைபெறுகிறது. சாமளாபுரம் குளத்தில் விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.
ஆலாங்காடு, நடராஜர் தியேட்டர் ரோடு, தாடிக்கார முக்கு ஸ்டாப் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா பொதுக்கூட்டம் நடத்துவதும், அங்கிருந்து விசர்ஜன ஊர்வலத்தை துவக்கி வைப்பதும் வழக்கம். இச்சாலை சில இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. குறிப்பாக, தாடிக்காரமுக்கு ஸ்டாப் வளைவு, மாநகராட்சி வணிக வளாகம் முன், அறிவுத்திருக்கோவில் செல்லும் நுழைவு வாயில் அருகில், ரோட்டரி மஹால் மற்றும் பெட்ரோல் பங்க் எதிரில் சாலை சேதமடைந்துள்ளது. குடிநீர் குழாய்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கேட்வால்வு மற்றும் இரும்பு மூடிகள் உள்ள பகுதிகளிலும் சாலை சேதமடைந்து குழியாக காணப்படுகிறது.
வணிக வளாக கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், நடைபாதைக்காக அமைக்கப்பட்டுள்ள கற்களுக்கு இடையே செல்வதால், ஆங்காங்கே நடைபாதை சேதமடைந்து குழிகள் ஏற்பட்டுள்ளன. ஊர்வலம் துவங்கும் நாளில் மக்களுக்கு சிரமம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், இச்சாலையை முழுமையாக சீரமைக்க வேண்டுமென ஹிந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.