Politics
“ஐயூஎம்எல் எம்.எல்.ஏக்கள் 2 பேரை அடைத்து வைத்தனர்” - அமைச்சர் ஷாஜகான் பரபரப்பு குற்றச்சாட்டு!

3 நாள் விடுமுறைக்குப் பின் தமிழக சட்டப்பேரவை இன்று (07-09-26) கூடியது. அப்போது காவல்துறை மீதான விவாதத்தின் போது சட்ட ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் விஜய் பதிலளித்தார். அப்போது முதல்வர் விஜய், திமுக குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கடுமையாக விமர்சித்து ஆவேசமாகப் பேசினார்.
முதல்வர் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். ஆனால் சபாநாயகர், பதில் அளிக்க அனுமதி அளிக்க முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறியதால் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து வணிகவரி, பத்திரப்பதிவு, வனத்துறை ஆகிய துறைகளின் மீது மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது ஐ.யூ.எம்.எல் எம்.எல்.ஏ சையத் பாரூக் பாஷா பேசியதாவது, “நேற்றைய முன்தினம் எங்களுடைய கட்சியினுடைய திருவண்ணாமலை மாவட்ட பொதுக்குழுவில் நான் தவறாக பேசியதாக சித்தரிக்கிறார்கள். நான் தவறாக பேசவில்லை, எங்களுடைய தலைவர் சொன்னதை தான் நான் பொதுக்குழுவில் பேசினேன். திமுக, அதிமுக இரண்டும் இணைந்து அதிமுகவை முதலமைச்சராக்க ஆக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதிமுக பா.ஜ.கவுடன் கூட்டணியில் இருக்கிறது. அந்த கொள்கை எங்களுக்கு ஏற்றுக்கொள்ளாது. நாங்கள் கோடிக்கு போக மாட்டோம்” என்று சொன்ன போது அதிமுக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், “அந்த கொள்கையில் இருப்பவர்களை நாங்கள் ஆதரிக்க மாட்டோம். கொள்கை கூட்டணியில் இருக்கக்கூடிய தவெகவை ஆதரிப்போம் என்று எங்கள் தலைவர் சொன்னார். அதை தான் நான் பொதுக்குழுவில் பேசினேன். எந்த கட்சியையும் நான் பேசவில்லை. அந்த கோடிக்கு சாயும் கட்சி ஐயூஎம்எல் கிடையாது. நான் வேறு யாரையும் எதிர்த்து பேசவில்லை” என்று பேசினார். இதையடுத்து பேசிய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான், “2026ஆம் ஆண்டு புதிய ஆட்சி மலர்ந்த பிறகு தமிழகத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய அதிர்வலைகளை நாம் அனைவரும் கண்டு கொண்டுள்ளோம். இந்த ஆட்சியினுடைய தலையாய நோக்கமாக முதல்வர் லஞ்சம் ஊழல் இல்லாத ஒரு ஆட்சி என்பதை தொடர்ச்சியாக பிரகடனப்படுத்தி கொண்டிருக்கிறார். நேற்று முன் தினம் எங்களுடைய உறுப்பினர் சையத் பாரூக் பாஷா பேசியதை திரித்தும் மரித்தும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த ஆட்சி அமைந்த பிறகு ஒட்டுமொத்த மக்களுக்கும் பெரிய எதிர்பார்ப்பு லஞ்சம் ஊழல் இல்லாத ஆட்சி என்பது தான். அதை மீறி பணம் வாங்கினார்கள், பேரம் பேசினார்கள் என்று சொல்வது எல்லாம் தலைமுறை தலைமுறைக்கு யாரும் அரசியல் செய்ய முடியாத ஒரு சூழ்நிலை வந்துவிடும். மே 4ஆம் தேதி தேர்தல் முடிவு வந்த பிறகு ஐயூஎம்எல், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிட்டு அவர்களின் பக்கம் நின்று முடிவெடுப்பதாக அறிவித்திருந்தாலும் மே 9ஆம் தேதி ஒன்றிய அரசினுடைய கைப்பாவையாக ஆளுநர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில் இந்த ஆதரவை நாங்கள் அளித்தோம். எதிர்க்கட்சியை பொறுத்தவரை முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்து விடக்கூடாது என்ற காரணத்தால் 7ஆம் தேதி திமுக தலைமை ஒரு முடிவை எடுத்து எங்களிடம் சொன்னது.
8ஆம் தேதி முடிவை மாற்றி இன்னொரு யோசனையை சொன்னது. முஸ்லீம் லீக் அதை ஏற்க மறுத்ததது. சில விஷயங்களை வெளிப்படையாக சொல்ல முடியாது. 8ஆம் தேதி இரவு 10 மணிக்குப் பிறகு இந்தியன் முஸ்லீம் லீக் கட்சியின் இரண்டு உறுப்பினர்களை ஒரு ஹோட்டலில் அடைத்து வைத்தது யார்? மிரட்டியது யார்? எங்களுக்கு காவலுக்கு போட்டது யார்? என்பதை உடைத்து சொல்ல வேண்டிய அவசியம் வந்துவிடும். எங்களை பொறுத்தவரைக்கும் ஒன்றிய அரசினுடைய ஆளுநர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில் முதலமைச்சருக்கு நாங்கள் ஆதரவு கொடுத்து இந்த ஆட்சி அமைவதற்கு காரணமாக இருந்தோம். இந்த மானிய கோரிக்கையில் ஒவ்வொரு துறையும் அறிவித்த பிறகு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எல்லாம் செயல்பட தொடங்கிவிடும். ஆனால், அந்த பதற்றம் எதிர்கட்சிகளை குறிப்பாக திராவிட முன்னேற்ற கழகத்தை நிலைகுலைய வைத்துள்ளது” என்று குற்றம் சாட்டினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)





