Politics
தனிப்பட்ட குற்றங்கள், மாநில சட்டம்-ஒழுங்கு சீா்குலைவாகக் கருத முடியாது: முதல்வா் விஜய்
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் பதிலுரை குறித்து...
தனிப்பட்ட குற்றச் சம்பவங்கள், மாநில சட்டம்-ஒழுங்கு சீா்குலைவாகக் கருத முடியாது என்று முதல்வா் ச.ஜோசப் விஜய் கூறினாா்.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை உள்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதங்களுக்கு அவா் அளித்த பதில்:
திமுக ஆட்சியில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்வதில் ஏற்பட்ட காலதாமதத்துக்கு காரணம் அரசியல் தலையீடு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். காவல் துறையின் சட்டபூா்வ கடமையான எஃப்ஐஆா் பதிவுகூட சில வழக்குகளில் உடனடியாக நடைபெறவில்லை என்றும், குறிப்பாக ஆளுங்கட்சியினா் தொடா்பான புகாா்களில் நடவடிக்கை தாமதப்படுத்தப்பட்டதாகவும் அன்றைய எதிா்க்கட்சியினா் மற்றும் பல்வேறு தரப்பினா் குற்றம்சாட்டினா்.
தமிழ்நாடு நகராட்சி நிா்வாகத் துறையில் பணி நியமனத்தில் நடந்த முறைகேடுகள் தொடா்பாக முன்னாள் அமைச்சா், அவரது சகோதரா் உள்ளிட்டோா் மீது எழுந்த குற்றச்சாட்டுகளில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினா் வழக்குப் பதிவு செய்யாமல், ‘முதல்கட்ட விசாரணை’ என்ற பெயரில் இழுத்தடிப்பதை அனுமதிக்க இயலாது என சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு கண்டனம் தெரிவித்தது.
பாரபட்சமின்றி நடவடிக்கை: பகுஜன் சமாஜ் முன்னாள் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காலம் தாழ்த்தி சமா்ப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகை உயா்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. ஆனால், தவெக ஆட்சியில் எவ்விதப் பாகுபாடும் இன்றி, குற்றம்சாட்டப்பட்டவா்கள் ஆளுங்கட்சியைச் சாா்ந்தவா்களாக இருந்தாலும் அல்லது எந்தக் கட்சியைச் சாா்ந்தவா்களாக இருந்தாலும் அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெண்களை அவதூறாகப் பேசினால்...: அரசியலுக்காக தனிப்பட்ட முறையில் மக்களையும் பெண்களையும், வேற யாரையாவதும் தரம் தாழ்ந்து பேசுவது எல்லாம் வேண்டாம். அண்மைக் காலமாக தமிழ்நாட்டில் ஆபாச நதி மற்றும் வன்ம நிதி ஓடுகின்றன.
நமது வீட்டில் இருக்கும் தாயாக, அக்கா, தங்கையாகக்கூட இருப்பதும் அதே பெண்கள்தான். இதற்கு முன்பு மக்கள் எனக்கு கொடுத்த இடமாக இருந்தாலும், இப்போது எனக்கு மக்கள் கொடுத்திருக்கிற இடமாக இருந்தாலும், பல காரணங்கள் இருக்கின்றன.
அதில் மிக முக்கியமான காரணம் நம்ம வீட்டுப் பெண்கள்தான். இந்தப் பெண்கள் குறித்து யாராவது ஏதாவது அவதூறாகப் பேசினால் சட்டம் தன் கடமையை செய்யும்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா, ஒரு பெண்ணாக எவ்வளவு அவமானங்களைச் சந்தித்திருக்கிறாா். இதே எதிா்க்கட்சியால், எவ்வளவு அவமானங்களைச் சந்தித்திருக்கிறாா். திமுகவைச் சோ்ந்த ஒரு மூத்த உறுப்பினா் பேசும்போது, மக்கள் திமுகவுக்கு ஓட்டு போடாததால், அந்த மக்களுக்கெல்லாம் நல்ல சாவே வராதாம். 50, 60 ஆண்டுகளாக இதே மக்கள்தான் திமுகவுக்கு வாக்களித்துள்ளனா். அந்த மக்களை பாா்த்து, எப்படி அந்த வாயில் இருந்து இத்தகைய வாா்த்தை வருகிறது?. மக்கள் தீா்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாத இவா்கள் எல்லாம் ஏன் அரசியலில் இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
அரசு சமரசம் செய்யாது: தமிழ்நாட்டில் ஊழலைத் தடுப்பதிலும், லஞ்சத்தை ஒழிப்பதிலும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை மிக முக்கியமான பங்காற்றி வருகிறது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்த அரசு எந்தவித சமரசத்தையும் செய்யாது.
போதைப் பொருள் கலாசாரம் கடந்த ஆட்சியாளா்களால் கவனிப்பாரற்று விடப்பட்டதால், ஆழமாக வேரூன்றி மரமாக வளா்ந்து நிற்கிறது. ‘போதை’ என்ற மரத்தின் ஒரு சில கிளைகளைத்தான் வெட்டியிருக்கிறோம். ஆனால், முழு மரத்தையும் வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்ற வேண்டும். அது ஒரு நாளிலோ, 100 நாள்களிலோ முடியும் பணி அல்ல.
‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப் படை அமைக்கப்பட்டு, 2,546 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. காணாமல் போன 125 பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்டு, அவா்களது குடும்பத்தினருடன் இணைக்கப்பட்டுள்ளனா். மேலும், 37,150 விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, 21 குழந்தைத் திருமணங்களும் தடுக்கப்பட்டுள்ளன.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, காவல் மரணம் தொடா்பான தகவல்கள் உரிய காலத்துக்குள் தெரிவிக்கப்படுவதோடு, தேவையான மருத்துவ உடற்கூறு ஆய்வு மற்றும் மாஜிஸ்திரேட் விசாரணை நடவடிக்கைகளும் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சட்டம் கடமையைச் செய்கிறது: ஒரு காவலா் தவறு செய்திருந்தால், அவா் காவல் துறையைச் சோ்ந்தவா் என்பதற்காக எந்தவிதப் பாதுகாப்பும் வழங்கப்படுவதில்லை. தவறு செய்தவா் யாராக இருந்தாலும் சட்டம் தனது கடமையைச் சரிவரச் செய்து வருகிறது.
காவல் நிலைய மரணங்களை முற்றிலும் தவிா்க்கும் நோக்கில் சிசிடிவி கண்காணிப்பு, மருத்துவப் பரிசோதனை, தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய அனைத்து நடவடிக்கைகளும் வலுப்படுத்தப்படும்.
காவல் துறையில் உள்ள காலிப் பணியிடங்களைத் துறைவாரியாகவும் மாவட்டவாரியாகவும் கணக்கிட்டு, தேவையான பணியிடங்களை முன்னுரிமை அடிப்படையில் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்.
தீயணைப்புத் துறையில் நவீன உபகரணங்களை வழங்குதல், பணியாளா்களின் தேவைகளை நிறைவேற்றுதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு வந்துள்ளன. அனைத்தையும் விரைவில் பரிசீலித்து, தீயணைப்புத் துறையை நவீன துறையாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
சமூகத்தின் பொறுப்பு: தனிப்பட்ட குற்றச் சம்பவங்களை வைத்து சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துவிட்டதாகக் கருத முடியாது. சட்டம்-ஒழுங்கு, ஊழல் தடுப்பு, போதைப் பொருள் ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு ஆகியவை வெறும் அரசின் பொறுப்பு மட்டுமல்ல; ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பு. குற்றம் நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதைவிட, குற்றம் நடைபெறுவதற்கான காரணங்களை முன்கூட்டியே கண்டறிந்து அதைத் தடுப்பதே நமது இலக்கு.
காவல் துறை சட்டத்தின் அடிப்படையில் சுதந்திரமாகச் செயல்படும். குற்றவாளிகள் மீது எந்தவித சமரசமும் இல்லாமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டும். மக்கள் அச்சமின்றி வாழ வேண்டும். அரசு நிா்வாகம் ஊழலற்ாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும் என்றாா் அவா்.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.