Arts, culture, entertainment and media
டாஸ்மாக் கடைகள் அடைப்பு ரூ.1.75 கோடி வருவாய் இழப்பு
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் முழுதும் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், அரசுக்கு, 1.75 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில், 76 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அவற்றில், 195 விற்பனையாளர்கள், 90 மேற்பார்வையாளர்கள் பணிபுரிகின்றனர். காலி மதுபாட்டிலை திரும்ப பெறும் திட்டத்தில் உள்ள இடர்பாடுகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்தி, டாஸ்மாக் ஊழியர்கள், நேற்று முன்தினம் முதல், மாவட்டம் முழுதும், 76 கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இரண்டாம் நாளான நேற்று, டாஸ்மாக் ஊழியர்களிடம் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அதன்பின், நேற்று மதியம், 1:00 மணிக்கு மேல் படிப்படியாக, 76 கடைகளும் திறக்கப்பட்டன. ராணிப்பேட்டை மாவட்டம் முழுதும், நேற்று முன்தினம், 76 கடைகள் அடைக்கப்பட்டதால் அரசுக்கு, 1.75 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.