“லண்டனில் வேறு வேலை பார்க்கிறார் விஜய்!” -ராஜேந்திர பாலாஜி சுளீர்!
சிவகாசியில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு பேசினார். அதில் அவர் பேசியதாவது, “விஜய் விபத்தில் முதலமைச்சரானவர். 107 இடங்களில் வெற்றி பெற்று தற்போது 106 சீட்டுகள் மட்டுமே அவர்களிடம் உள்ளன. தவெக ஓட்டுச்சுவரில் உலை வைத்துக்கொண்டிருக்கிறது. எந்த நேரத்தில் சுவர் விழும் என்பதே தெரியாது. ஆட்சி நீடிக்குமா, நிலைக்குமா என்ற நிலையில்தான் இன்றைக்கு விஜய் இருக்கிறார். அதற்குள் ஏன் இவ்வளவு ஆட்டம், இத்தனை ஆர்ப்பாட்டம்?
சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியாமல், மூன்று நாட்கள் கழித்துத்தான் பதில் சொல்வேன் என்று கூறி, எழுதியதை கண்ணாடி முன் நின்று பேசி பழகி, அதை சட்டமன்றத்தில் ஒப்புவித்து வசனம் பேசிவிட்டுச் சென்றுள்ளார். தமிழக மக்களுக்குச் சொன்ன வாக்குறுதிகளைப் பற்றி கேள்வி கேட்டால், முதல்வர் அதைப் பற்றி பேசாமல் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு குறித்து பேசி குழப்பத்தை ஏற்படுத்திவிட்டு செல்கிறார். சட்டமன்றத்தில் விஜயின் நாடகம் மட்டுமே நடக்கிறது. பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சிதான் நடக்கிறது.
சட்டமன்றத்தில் எந்த அமைச்சரும் ஒழுங்காகப் பேசுவதில்லை. வேளாண்துறை குறித்து கேள்வி எழுப்பினால் பொதுப்பணித்துறை அமைச்சர் பதிலளிக்கிறார். யார் யாரோ பதில் சொல்கிறார்கள். இப்படிப்பட்ட நிர்வாகம்தான் இன்றைக்கு தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. பட்டாசு ஆலைகளில் ஒரு நாளைக்கு 10 முறை ஆய்வு செய்தால் பட்டாசு தொழிலாளர்கள் எப்படி பிழைப்பார்கள்? பட்டாசு உற்பத்தி எப்படி நடக்கும்? தவெக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் 260 பட்டாசு ஆலைகளை மூடியது. மூடப்பட்ட பட்டாசு ஆலைகளைத் திறக்க நாங்கள் குரல் கொடுத்தோம். பட்டாசு தொழிலாளர்கள் தற்போது அதிகாரிகளின் ஆய்வுக்கு அஞ்சி பதற்றத்தில் வேலை பார்க்கிறார்கள். தவெக ஆட்சியின் நிர்வாகக் கோளாறு காரணமாகவே வெடி விபத்துகள் ஏற்படுகின்றன. அதிமுகவின் போராட்ட அறிவிப்புக்குப் பிறகுதான் தவெக அரசு பட்டாசு ஆலைகளைத் திறந்துள்ளது.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


