Politics
ஆட்சிக்கு வந்த 126 நாட்களில் ரூ. 36 ஆயிரம் கோடி கடன்: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு
சிவகாசி:''த.வெ.க., ஆட்சிக்கு வந்த 126 நாட்களில் ரூ. 36 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளார்கள்,'' என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.
சிவகாசியில் நடந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர் பேசியதாவது,
தி.மு.க., என்ற திமிங்கலத்தையே எதிர்த்து அடித்து நொறுக்கி வளர்ந்த அ.தி.மு.க., தற்குறிகளை கண்டு ஒழிந்து, அழிந்து போகாது. சட்டசபையில் பழனிசாமி கேள்வி கேட்டால் பதில் சொல்ல துப்பில்லாமல் 3 நாட்கள் கழித்துதான் பதில் சொல்வேன் என சொல்லி எழுதியதை கண்ணாடி முன் நின்று பேசி பழகி அதை சட்டசபையில் ஒப்புவித்து வசனம் பேசிவிட்டு சென்றுள்ளார். பட்டாசுக்கு பிரச்னை வந்த நேரத்தில் டெல்லி வரை சென்று பாதுகாத்தவர் பழனிசாமி. பட்டாசு ஆலைகளில் ஒரு நாளைக்கு 10 முறை ஆய்வு செய்தால் பட்டாசு தொழிலாளர்கள் எப்படி பிழைப்பார்கள், பட்டாசு உற்பத்தி எப்படி நடக்கும். த.வெ.க., ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் 260 பட்டாசு ஆலைகளை மூடியது. பட்டாசு தொழிலாளர்கள் தற்போது அதிகாரிகளின் ஆய்வுக்கு அஞ்சி பதற்றத்தில் வேலை பார்க்கிறார்கள். த.வெ.க., ஆட்சியில் எங்கேயாவது லஞ்சம் வாங்க நினைத்தால் அதை கண்டுபிடிக்க தனி குழு அமைத்துள்ளோம். லஞ்சம் வாங்கும் போது சிக்கிவிட்டால் உங்கள் பாணியிலேயே பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடுவோம்.
லண்டனில் தொழில் முதலீடு செய்ய முதல்வரை அனுப்பினால் அவர் அங்கு சென்று முதலீடு ஈர்க்காமல் வேறு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
த.வெ.க., ஆட்சிக்கு வந்த 126 நாட்களில் ரூ. 36 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளார்கள். தமிழகத்தில் தற்போது அறிவிப்பில்லா மின் வெட்டால் மக்கள் சிரமம் அடைந்துள்ளனர். இடைத்தேர்தலில் த.வெ.க., எப்படி வெற்றிபெறுவார்கள் என பார்ப்போம். அ.தி.மு.க., வேட்பாளர்கள் லட்சம் வாக்குகளை பெற்று வெற்றி பெறப் போவது உறுதி. அ.தி.மு.க., மட்டும் தான் மக்களுக்கு உதவும் இயக்கம். தி.மு.க., தங்கள் குடும்பத்தை மட்டுமே பார்க்கும். இவ்வாறு அவர் பேசினார்.
