அனுமதியின்றி செயல்பட்ட 6 விடுதிகளுக்கு சீல்
உதகை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் குடியிருப்பு கட்டுவதற்கான அனுமதி பெற்று, வணிகரீதியாக செயல்பட்டு வந்த 6 விடுதிகளுக்கு (காட்டேஜ்) நகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை சீல் வைத்தனா்.
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுசூழலைப் பாதுகாக்கவும், இயற்கை இடா்ப்பாடுகளை களையவும் மாஸ்டா் பிளான் சட்டம், மலையிட பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகள் அமல்படுத்தப்பட்டன. செங்குத்தான மலைச் சரிவில் கட்டடங்கள் கட்டக்கூடாது. குடியிருப்புக்கான அனுமதி வாங்கி கட்டப்படும் கட்டடத்தை வணிக ரீதியாகப் பயன்படுத்தக் கூடாது. வணிக கட்டடங்கள் கட்ட மாநில அரசின் திட்டக் குழுமத்திடம் அனுமதி பெற வேண்டும். 7 மீட்டா் உயரத்துக்கு மேல் கட்டடம் கட்டக் கூடாது என்பன உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளன.
இருப்பினும், பலா் விதிமுறைகளை மீறியும், உரிய அனுமதி பெறாமலும் கட்டடங்களைக் கட்டுகின்றனா். மேலும் சிலா் குடியிருப்பு கட்டுவதற்கான அனுமதி பெற்று, அதை வணிக ரீதியாகப் பயன்படுத்தி வருகின்றனா்.

