Arts, culture, entertainment and media
ஊட்டியில் விதிமீறி செயல்பட்ட காட்டேஜூகளுக்கு ‘சீல்’

ஊட்டி: ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடியிருப்பு கட்டுவதற்கான அனுமதி பெற்று, வணிக ரீதியாக செயல்பட்டு வந்த, 9 காட்டேஜுகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
நீலகிரியில் சுற்றுசூழலை பாதுகாக்கவும், இயற்கை இடர்பாடுகளை களையவும், மாஸ்டர் பிளான் சட்டம், மலையிட பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகள் கொண்டு வரப்பட்டன.
அதில், ‘செங்குத்தான மலைச்சரிவில் கட்டடங்கள் கட்டக்கூடாது; குடியிருப்பு அனுமதி வாங்கி வணிக ரீதியாக கட்டடம் பயன்படுத்த கூடாது; வணிக கட்டடங்கள் கட்ட மாநில அரசின் திட்ட குழுமத்திடம் அனுமதி பெற வேண்டும்; 7 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டடம் கட்டகூடாது,’ உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளன.
இருப்பினும் பலர் விதிமுறைகளை மீறியும், உரிய அனுமதி பெறாமலும் கட்டடங்களை கட்டுகின்றனர். சிலர் குடியிருப்பு கட்டுவதற்கான அனுமதி பெற்று, அதனை வணிகரீதியாக பயன்படுத்தி வருகின்றனர். ‘இதுபோன்ற கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,’ என, சென்னை ஐகோர்ட், நீலகிரி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.
தொடர்ந்து கடந்த சில நாட்களாக, நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், குடியிருப்பு கட்டுவதற்கான அனுமதி பெற்று அதனை வணிகரீதியாக பயன்படுத்தி வரும் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த இரு நாட்ரகளாக, ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி, நகரமைப்பு அலுவலர்கள் மகேந்திரகுமார், ஸ்ரீதரன் ஆய்வு மேற்கொண்டு, ‘சீல்’ வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கமிஷனர் பார்த்தசாரதி கூறுகையில், ‘‘ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட ஹாலிவுட் ஹில்ஸ், சத்திய சாய் நகர், கிளன்ராக் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு நாட்களில் நடந்த ஆய்வில், 9 கட்டடங்கள் குடியிருப்பு கட்டுவதற்கான அனுமதி பெற்று அதனை வணிக ரீதியாக பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்த கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது,’’ என்றார்.