Arts, culture, entertainment and media
ஊட்டியில் அதிகரித்த விதிமீறிய காட்டேஜ்கள் ‘சீல்’ வைக்கும் பணியை துவங்கிய நகராட்சி நிர்வாகம்

ஊட்டி: சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி வீடுகளுக்கு அனுமதி பெற்று, காட்டேஜ்களாக நடத்தி வரும் கட்டடங்களுக்கு ‘சீல்’ வைக்கும் பணி துவக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், நிலநடுக்கம் அபாயம் உள்ள இம்மாவட்டத்தில் கட்டடங்கள் கட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன. ஊட்டி நகராட்சியில் வீடுகளுக்கு அனுமதி பெற்று கட்டப்பட்ட கட்டடங்கள் தற்போது காட்டேஜ்களாகவும், ரிசார்ட்டுகளாகவும் செயல்பட்டு வருகின்றன. காட்டேஜ்களாக நடத்தி வரும் விதிமீறிய கட்டடங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு ‘சீல்’ வைக்க சென்னை ஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகளுக்கு அனுமதி காட்டேஜ்களாக நடத்தி வரும் கட்டடங்களுக்கு, ஊட்டி நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி தலைமையில் நகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. நேற்று புதுநகர் மேற்புற பகுதியில் உள்ள மூன்று காட்டேஜ்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
கமிஷனர் பார்த்தசாரதி கூறுகையில், ‘‘சென்னை ஐ கோர்ட் உத்தரவின்படி வீடுகளுக்கு அனுமதி பெற்று கொண்டு காட்டேஜ்களாக நடத்தி வரும் கட்டடங்களுக்கு ‘சீல்’ வைக்கும் பணிகள் இன்று (நேற்று) துவங்கப்பட்டது. நகராட்சி சார்பில், 48 மணி நேரம் கால அவகாசம் கொடுத்திருந்த நிலையில் அதையும் மீறி காட்டேஜ்களாக நடத்தி வந்த காட்டேஜ்களுக்கு தற்போது ‘சீல்’ வைக்கப்பட்டு வருகிறது ,’’ என்றார்.