“வெள்ளம் ஏற்படும் ஆபத்து உள்ளது” - தவெக அரசுக்கு அன்புமணி எச்சரிக்கை!
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தடுப்புச் சுவர் இருப்பதால் வெள்ளம் ஏற்படும் ஆபத்து உள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ள பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், அதனை உடனே அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து அன்புமணி தெரிவித்துள்ளதாவது, “பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நெய்தல் மீட்சி மற்றும் பாதுகாப்பு பணிகள் என்ற பெயரில், 3 கி.மீ நீளத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சதுப்பு நிலத்தை மீட்பதற்கு பதிலாக, அப்பகுதியில் வெள்ளத்தை ஏற்படுத்தி பேரழிவை உருவாக்கும் இத்திட்டத்தை திமுக அரசு தொடங்கியதும், இப்போதைய தவெக அரசு தொடர்ந்து செயல்படுத்துவதும் கண்டிக்கத்தக்கவை.
தமிழ்நாட்டின் கடலோர வளங்களை மீட்டெடுப்பதாகக் கூறி, தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் என்ற புதியத் திட்டத்தை கடந்த 2024&ஆம் ஆண்டில் திமுக அரசு தொடங்கியது. உலக வங்கியின் நிதியுதவியுடன் ரூ.1675 கோடி செலவில் தமிழகத்தின் 14 கடலோர மாவட்டங்களில் 1076 கி.மீ நீளமுள்ள கடலோரப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தான் இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று முந்தைய திமுக அரசு அறிவித்தது. பள்ளிக்கரணை உள்ளிட்ட கடற்கரையோர ஈரநிலங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பும் இந்தத் திட்டத்தின் முதன்மையான 4 நோக்கங்களில் ஒன்றாக திமுக அரசு அறிவித்தது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும் என்றாலோ, மீட்க வேண்டும் என்றாலோ, அதற்காக உடனடியாக மேற்கொள்ள வேண்டிய இரு நடவடிக்கைகள், ஒரு காலத்தில் 15,000 ஏக்கராக இருந்து இப்போது 1750 ஏக்கராக சுருங்கி விட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை இயன்றவரை அகற்றுவதும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லைகளை வரையறுத்து அறிவிக்கை செய்வதும் தான். ஆனால், அதற்கு பதிலாக மீதமுள்ள சதுப்பு நிலத்தையும் அழிக்கும் முயற்சியை திமுக அரசு தொடங்கியது. இந்த பேரழிவுத் திட்டத்திற்காக மட்டும் வனத்துறை மூலம் திமுக அரசு ரூ.21 கோடியை ஒதுக்கியுள்ளது.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)




