கண்மாய்களில் சீமைகருவேல மரங்கள் அகற்றம்: மான்கள் தவிக்கும் அபாயம்
திருவாடானை: திருவாடானை தாலுகா கண்மாய்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகள் துவங்கியதால் மான்கள் தவிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வனப்பகுதிகளை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவாடானை தாலுகாவில் ஏராளமான கண்மாய்கள் உள்ளன. பல்வேறு கண்மாய்களில் சீமைக்கருவேல மரங்களை ஏலம் விட்டு அகற்றும் பணிகள் நடக்கின்றன. இதனால் அங்குள்ள புள்ளி மான்கள் வாழ்விடத்தை இழந்து ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அடர்ந்த சீமைக்கருவேலம் காடுகளே புள்ளி மான்கள், முயல்கள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு பாதுகாப்பான வாழ்விடமாகவும், நிழலாகவும் விளங்கி வருகிறது.
தற்போது மரங்கள் வெட்டப்பட்டு வருவதால் மான்கள் உணவு மற்றும் குடிநீருக்காக அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கும், குடியிருப்புகளுக்கும் செல்லத் துவங்கியுள்ளன. இதனால் நாய்கள் கடித்து உயிரிழக்கும் அபாயமும், சாலை விபத்துகளில் சிக்கி அடிபடும் சூழலும் உருவாகியுள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
சீமைகருவேல மரங்களை அகற்றுவது வரவேற்கத்தக்கது. இருந்த போதும் வனவிலங்குகள் பாதிக்கப்படாதவாறு மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மான்கள் தங்குவதற்கு ஏதுவாக வனத்துறை சார்பில் மற்ற மரக்கன்றுகளை நட்டு வனப்பகுதிகளை மேம்படுத்தவும், குடிநீர் தொட்டிகள் அமைக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


