கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு, கழிவுநீர் கலப்பதால் பாதிப்பு: பரிதாபத்தில் செங்கமலப்பட்டி புது கண்மாய்
சிவகாசி: கண்மாய் முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு, கழிவு நீர் கலப்பதால் நீர் ஆதாரம் பாதிப்பு என சிவகாசி செங்கமலப்பட்டி புதுக் கண்மாய் பரிதாபத்தில் உள்ளது.
சிவகாசி அருகே செங்கமலப்பட்டி புதுக் கண்மாய் 80 ஏக்கர் பரப்பளவு, 100 ஏக்கர் பாசன வசதி உடையது. இக்கண்மாயினை நம்பி இப்பகுதி விவசாயிகள் நெல், மக்காச்சோளம், கத்தரி, தக்காளி, பாகற்காய், வாழை உள்ளிட்ட பயிர்கள் பயிரிடுகின்றனர். தவிர கண்மாய் நீரினை ஆதாரமாகக் கொண்டு கிணற்று பாசனத்திலும் விவசாயம் செய்யப்படுகின்றது. 5 ஆண்டுகளுக்கு முன்பு கண்மாய் மேலோட்டமாக துார்வாரப்பட்டது. தற்போது கண்மாய் முழுவதுமே சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளது. மேலும் கரையும் பலவீனம் அடைந்துள்ளது. கண்மாய்க்கு மழைக் காலங்களில் தண்ணீர் வருகின்ற வரத்துக் கால்வாயும் புதர்களால் ஆக்கிரமித்து உள்ளது. இதனால் மழை பெய்தாலும் தண்ணீர் ஓடி வர வழியில்லை. இரவு நேரங்களில் கண்மாயில் இறைச்சிக் கழிவுகள், கட்டடக் கழிவுகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை கொட்டி விட்டுச் சென்று விடுகின்றனர். இதனால் கண்மாய்க்கு தண்ணீர் வந்தாலும் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
கழிவுநீர் கலப்பதை தடுங்க.
புதுக் கண்மாய்க்கு வரத்து கால்வாய் தவிர பள்ளப்பட்டி கடம்பன்குளம், திருத்தங்கல் உறுஞ்சிகுளம் கண்மாயிலிருந்து தண்ணீர் வரும். அந்தக் கண்மாய்கள் கழிவுநீராக மாறிய நிலையில் புது கண்மாய்க்கும் கழிவு நீரே வருகின்றது. இந்தத் தண்ணீரை விவசாய நிலங்களுக்கு பாய்ச்ச முடியவில்லை. எனவே புதுக் கண்மாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.
வரத்துக் கால்வாய் புதர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் துார்வாரப்பட்டது. ஆனாலும் தற்போதும் வரத்து கால்வாயில் முட்தர்கள் ஆக்கிரமித்துள்ளது. தண்ணீர் இல்லாமல் கண்மாய் வறண்டு காணப்படுகிறது. மேலும் கண்மாய் ஒரே சீராக இல்லாமல் ஆங்காங்கே பள்ளம், மேடாக காட்சியளிக்கிறது. பள்ளத்தில் தேங்கியுள்ள தண்ணீரை பயன்படுத்த முடியவில்லை. எனவே கண்மாயினை முழுமையாக துார்வார வேண்டும்.
கண்மாய் 25 ஆண்டுகளுக்கு முன்பு குளிக்க துணி துவைக்க என பல்வேறு தேவைகளுக்கும் பயன்பட்டு வந்தது. தற்போது கண்மாயில் கழிவுநீர் கலப்பதால் குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து கிடைக்கும் தண்ணீர் கலங்கலாகவே வருகின்றது. இதனால் தண்ணீரைப் பயன்படுத்த முடியாமல் அவதிப்பட நேரிடுகிறது.