இந்திய ஆடைகளுக்கு பிரீமியம் சந்தையில் புதிய வாய்ப்பு: பிரான்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏ.இ.பி.சி. வரவேற்பு
திருப்பூர்:இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையை சர்வதேச பிரீமியம் சந்தைகளுடன் இணைக்கும் வகையில், பாரத் டெக்ஸ் டிரேட் பெடரேஷன் மற்றும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சர்வதேச பேஷன், ஜவுளி மற்றும் கொள்முதல் தளம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பாரீசில் நடந்த பிரீமியம் விஷன் கண்காட்சியில், ஏ.இ.பி.சி. தலைவர் சக்திவேல் மற்றும் பிரீமியர் விஷன் நிறுவன பேஷன் பிரிவு தலைமைச் செயல் அதிகாரி புளோரன்ஸ் ரூசன் ஆகியோர் இடையே, மத்திய ஜவுளி அமைச்சக செயலாளர் நீலம் ஷமி ராவ், கைத்தறித் துறை மேம்பாட்டு கமிஷனர் பீனா முன்னிலையில் ஒப்பந்தம் ஏற்பட்டது.
இதன் வாயிலாக, இந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள், ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் சர்வதேச வர்த்தகர்கள், முன்னணி பேஷன் நிறுவனங்கள் மற்றும் பிரீமியம் கொள்முதல் நிறுவனங்களுடன் நேரடியாக இணையும் வாய்ப்பு உருவாகும். அளவு அடிப்படையிலான ஏற்றுமதியைத் தாண்டி, உயர்மதிப்பு, வடிவமைப்பு சார்ந்த மற்றும் பிரீமியம் பேஷன் பொருட்கள் ஏற்றுமதி அதிகரிக்கும். உலகளாவிய பேஷன்கள், சந்தைத் தேவைகள் மற்றும் நிலைத்தன்மை சார்ந்த தயாரிப்புகள் குறித்த அந்நிறுவனத்தின் சர்வதேச அனுபவம், இந்திய நிறுவனங்களுக்கு பயன் தரும்.

