Economy, business and finance
‘மதிப்பு கூட்டு ஆடை; இந்தியா ஜொலிக்கும்’
திருப்பூர், செப். 7– ‘‘மதிப்பு கூட்டிய ஆயத்த ஆடை உற்பத்தியில், நம்பிக்கைக்குரிய நாடாக இந்தியா
‘‘மதிப்பு கூட்டிய ஆயத்த ஆடை உற்பத்தியில், நம்பிக்கைக்குரிய நாடாக இந்தியா உருவெடுக்கும்’’ என, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
இந்திய ஜவுளித் துறை உயர்மட்ட பிரதிநிதிகள் குழு, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், சர்வதேச பேஷன், ஆடம்பர பொருட்கள் மற்றும் சில்லரை வணிக பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியது. மத்திய ஜவுளித்துறை செயலர் நீலம் ஷமிராவ் தலைமையில் நடந்த இந்த சந்திப்பில், ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல், கைத்தறி மேம்பாட்டு கமிஷனர் பீனா, ஜவுளித்துறை இயக்குனர் சர்வேஷ், ஏ.இ.பி.சி., செயற்குழு உறுப்பினர் திருக்குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை கொள்முதல், தயாரிப்பு மேம்பாடு, மதிப்பு கூட்டப்பட்ட ஆடை உற்பத்தி, பாரம்பரிய கைவினைத்திறன் மற்றும் கைவினை நுட்பங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்தியாவின் வளமான ஜவுளி பாரம்பரியம், திறமையான கைவினைஞர்கள் மற்றும் கைத்தறி மரபுகள், சர்வதேச வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கு சிறந்த வாய்ப்பாக உள்ளன.
வழக்கமான உற்பத்தி மற்றும் கொள்முதலை தாண்டி, வடிவமைப்பு சார்ந்த, அதிக மதிப்பு கொண்ட மற்றும் நிலைத்தன்மை அடிப்படையிலான பேஷன் உற்பத்தியில் இந்தியாவுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
இந்த சந்திப்பு மூலம், படைப்பாற்றல், கைவினைத்திறன், புதுமை மற்றும் உயர் மதிப்பு கொண்ட ஜவுளி, ஆயத்த ஆடை உற்பத்தியில் இந்தியா நம்பகமான உலகளாவிய கூட்டாளியாக உருவெடுக்கும்.
மேலும், உலகளாவிய பேஷன் மற்றும் ஜவுளித் துறையில் இந்தியா–பிரான்ஸ் இடையேயான நீண்டகால ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இந்த சந்திப்பு அடித்தளமாக அமைந்துள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
