Religion
விநாயகர் சிலையில் ரசாயனம் இருக்கா? மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் ஆய்வு

கோவை: நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்யும் விநாயகர் சிலைகளை, சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், போலீசாரோடு இணைந்து ஆய்வு செய்தனர்.
விநாயகர் சதுர்த்திக்கு இந்து அமைப்புகள், நகரில் 780 சிலைகள், புறநகரில் 1,600 சிலைகள் என்று 2,380 சிலைகள் பிரதிஷ்டை செய்திருந்தனர்.
வீடுகள், வீதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சிலைகளை, நேற்று மதியம் முதல் விசர்ஜனத்துக்காக ஊர்வலமாக எடுத்துச் சென்று குறிச்சி, முத்தண்ணன், சிங்காநல்லூர் குளங்களில் விசர்ஜனம் செய்தனர்.
குளங்களில் போலீசாரும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் சிலைகளை ஆய்வு செய்தனர்.
மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
சிலை தயாரிப்புக்கு முன் கைவினைக்கலைஞர்களிடம், ரசாயன பொருட்களை சிலை தயாரிப்பிற்கு பயன்படுத்த வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளோம்.
இந்த ஆய்வில் ரசாயனம் கலந்திருந்தால் அந்த சிலை எங்கு தயாரிக்கப்பட்டது, எங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது என விசாரித்து போலீசாரிடம் வழங்குவோம். அடுத்த ஆண்டு சிலை வைக்க அனுமதி கேட்டு வரும்போது, போலீசார் எச்சரித்து அனுப்புவர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.