Politics
விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் வருவாய்த்துறையினர் அறிவுரை
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில், விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் நடந்தது. தாசில்தார் முருகேசன் தலைமை வகித்தார். தலைமையிடத்து துணை தாசில்தார் பட்டுராஜா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். அதில், விநாயகர் சதுர்த்திக்கு பின்பற்ற வேண்டிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
விநாயகர் சிலை நிறுவ விரும்பும் அமைப்பாளர் படிவம்,1ல் விண்ணப்பிக்க வேண்டும். சிலை நிறுவப்படவுள்ள இடம், தனியார் இடமாக இருந்தால் நில உரிமையாளர்களிடம் இருந்தும், அரசு புறம்போக்காக இருந்தால் சம்பந்தப்பட்ட துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறை ஆகிய அலுவலர்களிடம் இருந்து தடையின்மை சான்று பெற வேண்டும்.
சம்பந்தப்பட்ட காவல்துறை அலுவலர்களிடம் ஒலி பெருக்கிகள் பயன்படுத்த அனுமதி பெற வேண்டும். தீயணைப்பு அலுவலரிடமிருந்து தற்காலிகமாக அமைக்கப்பட்ட சிலை அமைவிடம், தீ தடுப்பு வசதிகளை கொண்டுள்ளது என்பதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும்.
தற்காலிக மின் இணைப்பு பெற, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் ஒப்புதல் கடிதம் பெற வேண்டும். நிறுவப்பட உள்ள சிலைகள் துாய களிமண்ணால் தயாரிக்கப்பட்டவையா அல்லது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தக்கூடிய ‘பிளாஸ்ட்ஆப் பாரீஸ்’ போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களான வண்ணங்கள் பூசப்பட்டவையா என, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் பரிசோதித்து சான்று பெற வேண்டும். இந்த நிபந்தனைகளுடன் காவல்துறையின் அனுமதி கடிதம் பெற்றும் சமர்பிக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.