Religion
கிருஷ்ணர் ஜெயந்தி விழா கோலாகலம் திருத்தணியில் திரளான பக்தர்கள் தரிசனம்
திருத்தணி, செப். 5-– கிருஷ்ணர் ஜெயந்தி விழாவை ஒட்டி, திருத்தணியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
கிருஷ்ணர் ஜெயந்தி விழாவை ஒட்டி, திருத்தணியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருத்தணி ஒன்றியம், ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள ராதா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில், நேற்று கிருஷ்ணர் ஜெயந்தி விழாவை ஒட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் நடந்தது.
தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
திருத்தணி – அரக்கோணம் சாலை, சுப்பிரமணியபுரம் பகுதியில் கிருஷ்ணர் ஜெயந்தி விழாவை ஒட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன. காலையில், உற்சவர்கள் ஸ்ரீராதா – கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அதேபோல், திருத்தணி பைபாஸ் சாலையில், திருத்தணி யாதவர் சங்கம் சார்பில், கிருஷ்ண பெருமானின் திருவுருவப் படத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்து, பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருத்தணி அடுத்த எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலில், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு கிருஷ்ணர் திருவீதியுலா நடந்தது.
மேலும் மேல்கசவராஜபேட்டையில் உள்ள ருக்மணி சத்யபாமா சமேத சந்தான கோபால சுவாமி கோவில், சின்னகடம்பூர் மோட்டூர் கிராமத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலிலும், கிருஷ்ணர் ஜெயந்தி விழா கோலாகலமாக நடந்தது.
அதேபோல், பொதட்டூர்பேட்டை அடுத்த மேல் பொதட்டூரில் உள்ள தரணிவராக சுவாமி கோவில், ஆர்.கே.பேட்டை அடுத்த சந்தான வேணுகோபால சுவாமி கோவில், வங்கனுார் அஷ்டலட்சுமி சமேத நாராயண பெருமாள் கோவில்களிலும், நேற்று திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
அம்மையார்குப்பம், சின்மயானந்தா பஜனை குழுவினர், கிருஷ்ணர் ஜெயந்தியை ஒட்டி, ராமர் கோவிலில் சிறப்பு பஜனை நடத்தினர்.