Politics
நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அரும்புலியூரில் ஏற்படுத்த வலியுறுத்தல்
அரும்புலியூர், செப். 7– அரும்புலியூரில் ஆண்டு முழுதும் செயல்படும் வகையில் அரசு நேரடி நிரந்தர நெல்
அரும்புலியூரில் ஆண்டு முழுதும் செயல்படும் வகையில் அரசு நேரடி நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் ஏற்படுத்த வேண்டும் என வவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் குறுவட்டத்தில் பினாயூர், சீட்டணஞ்சேரி, சாத்தணஞ்சேரி, குருமஞ்சேரி, ஆத்தங்கரை, அரும்புலியூர் உள்ளிட்ட கிராமங்களில் பாலாற்று பாசனம் மூலம் அதிக அளவில் நெல் சாகுபடி செய்யும் பகுதியாக உள்ளது.
இதேபோன்று, களியப்பேட்டை, திருவானைக்கோவில், காவிதண்டலம் உள்ளிட்ட கிராமங்களில் ஆழ்த்துளை கிணற்று பாசனம் மூலமாகவும், மதுார், திருமுக்கூடல், பழவேரி, அருங்குன்றம், சிறுதாமூர் உள்ளிட்ட கிராமங்களில் ஏரி மற்றும் கிணற்று பாசனம் மூலமாகவும் நெல் பயிரிடுகின்றனர். மாணாவாரி பருவத்திற்கும் விவசாயிகள் நெல் சாகுபடி செய்கின்றனர்.
இப்பகுதிகளில் சம்பா, நவரை, சொர்ணவாரி ஆகிய 3 போகம் நெல் பயிரிடும் நிலையில் நவரை பருவத்திற்கு குறிப்பிட்ட இடங்களிலும், சொர்ணவாரி பருவத்திற்கு ஓரிரு இடங்கள் என அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படுத்தப்படுகிறது.
மற்ற நேரங்களில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்மணிகளை வெளி சந்தைகளிலும், தனியார் நெல் வியாபாரிகளிடமும் விற்பனை செய்யும் நிலை இருந்து வருகிறது.
இதனால், விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லுக்கு உரிய விலை கிடைக்காமல் இழப்பு ஏற்படுவதாக கூறி வருகின்றனர்.
எனவே, நெல் விளைச்சல் அதிகம் கொண்ட அரும்புலியூரில் ஆண்டு முழுதும் செயல்படும் வகையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரும்புலியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.