Politics
மதுராந்தகம் இடைத்தேர்தல்: தவெக-வில் சீட் வார்... மரகதம் குமரவேலுக்கு எதிராக உருவாகும் ரேஸ்!
"எம்.எல்.ஏ சீட்டையும் அவர்களுக்கே கொடுப்பது சரியா... வேண்டுமானால், அக்கா மரகதம் குமரவேல் வரும் எம்.பி தேர்தலில் போட்டியிடட்டும்..." என்று தலைமைக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள் தவெக நிர்வாகிகள். -seat race war begins in tvk party for maduranthagam constituency

"எம்.எல்.ஏ சீட்டையும் அவர்களுக்கே கொடுப்பது சரியா... நம் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு அந்த வாய்ப்பை வழங்க வேண்டும். வேண்டுமானால், அக்கா மரகதம் குமரவேல் வரும் எம்.பி தேர்தலில் போட்டியிடட்டும்..." என்று தலைமைக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள் தவெக நிர்வாகிகள்.
தமிழகத்தில் காலியாக இருக்கும் ஏழு தொகுதிகளில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவித்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். அந்த இரண்டு தொகுதிகளிலும் எம்.எல்.ஏ-க்களாக இருந்து, பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மரகதம் குமரவேலும் சத்தியபாமாவும் த.வெ.க-வில் இணைந்தனர். அவர்களுக்குத்தான் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமென கட்சித் தலைமையால் உத்தரவாதமும் அளிக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில், மதுராந்தகம் சீட்டுக்கு கடுமையாக முட்டி மோதும் த.வெ.க நிர்வாகிகள் சிலர், மரகதம் குமரவேலுக்கு சீட் கிடைக்கவிடாமல் இப்போதே முட்டுக்கட்டைப் போடத் தொடங்கியிருக்கிறார்கள்.
அது குறித்து நம்மிடம் பேசிய த.வெ.க-வின் இரண்டாம்கட்ட நிர்வாகிகள் சிலர், "நடந்து முடிந்த தேர்தலில், மதுராந்தகம் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் 69,284 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றார். இரண்டாம் இடத்துக்கு வந்த த.வெ.க வேட்பாளரும் தலித் எழில்மலையின் மகளுமான எழில் கேத்தரீன், 62,090 வாக்குகளைப் பெற்றார். இப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், மீண்டும் போட்டியிட வாய்ப்பு எதிர்பார்க்கிறார் எழில் கேத்தரீன்.
எழில் கேத்தரீனுடைய சகோதரி எழில் கரோலின், வி.சி.க-வின் மாநில துணைப் பொதுச் செயலாளராக பொறுப்பில் இருக்கிறார். நடந்து முடிந்த தேர்தலில், அரக்கோணம் தொகுதியில் வி.சி.க சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் எழில் கரோலின். அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் மூலமாகவும் சீட்டுக்கு முயற்சி செய்யும் எழில் கேத்தரீன், தன்னுடைய சகோதரி எழில் கரோலின் மூலமாக வி.சி.க தலைவர் திருமாவளவனை பிடித்து, அவருடைய சிபாரிசையும் எதிர்பார்த்திருக்கிறார்.
தற்போது, வி.சி.க., கம்யூனிஸ்ட்டுகள், ம.தி.மு.க., ஐ.யூ.எம்.எல் என வலுவான கூட்டணி த.வெ.க-வுக்கு அமைந்திருக்கும் சூழலில், கட்சியின் சார்பாக மதுராந்தகத்தில் யார் போட்டியிட்டாலும் வெல்லக்கூடிய சூழல்தான் நிலவுகிறது. ஆகவே, எப்படியாவது மீண்டும் வாய்ப்பு பெற்றுவிட காய்நகர்த்துகிறார் எழில் கேத்தரீன்.
இதற்கிடையே, செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளரான மின்னல் குமார் தரப்பினர், 'மரகதம் குமரவேலுக்கு மாநில துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கிவிட்டோம். அவருடைய கணவர் தையூர் குமரவேலுக்கு செங்கல்பட்டு கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு கொடுத்தாகிவிட்டது. எம்.எல்.ஏ சீட்டையும் அவர்களுக்கே கொடுப்பது சரியா... நம் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு அந்த வாய்ப்பை வழங்க வேண்டும். வேண்டுமானால், அக்கா மரகதம் குமரவேல் வரும் எம்.பி தேர்தலில் போட்டியிடட்டும். அவர் ஏற்கெனவே எம்.பி-யாக இருந்தவர்தானே...' என்று தலைமையிடம் கேட்டிருக்கிறார்கள்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடனேயே சீட்டுக்கான ரேஸ் சூடு பிடித்துள்ளதால், கலங்கிப் போயிருக்கிறார் மரகதம் குமரவேல். கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தைச் சந்தித்து, தனக்கான சீட்டை உத்தரவாதப்படுத்தும்படி மீண்டும் அழுத்தமாகக் கேட்டிருக்கிறார். 'உங்களுக்குத்தான் சீட். சி.எம் சொல்லிட்டாரு... நடுவுல யார் பேச்சையும் காதுல வாங்கிக்காதீங்க...' என புஸ்ஸி ஆனந்த் தைரியம் சொல்லி அனுப்பியிருப்பதால், தொகுதிக்குள் வேலையை ஆரம்பித்திருக்கிறார் மரகதம் குமரவேல். ஆனாலும், அவரிடம் பதற்றம் குறையவில்லை" என்றனர் விரிவாக.
இதற்கிடையே, பா.ம.க தங்களுடன் கூட்டணியில் இருப்பதால், தொகுதியை எப்படியாவது கைப்பற்றிவிட வியூகங்களை வகுக்கத் தொடங்கியிருக்கிறது அ.தி.மு.க. வி.சி.க-விலிருந்து தங்கள் கட்சிக்கு வந்த பனையூர் பாபுவை வேட்பாளராக நிறுத்த ஆலோசித்திருக்கிறது தி.மு.க. போட்டி கடுமையாகவே இருக்குமென்பதால், இப்போதே தேர்தல் அனல் மதுராந்தகத்தில் கூடியிருக்கிறது.
