சாலையோர பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்

கும்மிடிப்பூண்டி: சென்னை – கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையோரம் ஏற்பட்டுள்ள சாலை பள்ளத்தால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்து எளாவூர் இ.சி.எல்., தொழிற்சாலை எதிரே, ஆந்திரா மார்க்கத்தில் தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையோரம், 50 மீட்டருக்கு சாலை அரிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது.
பெரியஓபுளாபுரம் ஊராட்சி துாய்மை பணியாளர்கள், தினமும் சாலையோரம் குப்பை கழிவுகளை கொட்டி வருகின்றனர். குறிப்பிட்ட அளவு குப்பை கழிவுகள் சேர்ந்தவுடன், பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையை ஒட்டியுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் தள்ளப்படுகிறது.
இதனால், குப்பை கழிவுகள் குவித்த இடம் பள்ளமாக மாறியதால், பிடிமானம் இன்றி சாலையில் அரிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சாலை அரிப்பால், அவ்வழியாக செல்லும் வாகனங்களுக்கு விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, இரவு நேரத்தில் சாலையோரம் செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் கவிழும் அபாயம் உள்ளது. கழிவுகள் குவிப்பது நிறுத்தப்பட்ட போதிலும், சாலை அரிப்பு சீரமைக்கப்படாமல் உள்ளது.
எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி, சாலையை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.