Politics
சி. விஜயபாஸ்கா் மீது பண மோசடி புகாா்: செப். 15-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

பேரவைத் தோ்தலில் ‘சீட்’ வாங்கித் தருவதாகக் கூறி வாங்கிய ரூ.4 கோடியைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கர் வழக்கு பற்றி...
பேரவைத் தோ்தலில் ‘சீட்’ வாங்கித் தருவதாகக் கூறி வாங்கிய ரூ.4 கோடியைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கருக்கு எதிரான செப். 15-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்த தனவிமல் தாக்கல் செய்துள்ள மனுவில், சட்டப்பேரவைத் தேர்தலில் ஆலங்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்ததாகக் கூறியுள்ளார். இதுசம்பந்தமாக அப்போது மாவட்ட செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தன்னை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, தேர்தல் செலவுகளை மேற்கொள்ளும் தகுதியை நிரூபிக்க 5 கோடி ரூபாய் தரும்படி வலியுறுத்தினார்.
மேலும், வேட்பாளர் பட்டியல் அறிவித்ததும் பணத்தை திருப்பித் தந்து விடுவதாக உறுதியளித்ததாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். அதன்படி, 4 கோடியே 50 லட்சம் ரூபாயை திரட்டி, சி. விஜயபாஸ்கர் குறிப்பிட்ட ஒப்பந்ததாரர் சோத்துப்பாலை முருகேசனிடம் கொடுத்ததாகவும், வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் அறிவிக்கப்பட்ட பின், தேர்தல் செலவுகளுக்காக பணத்தை திருப்பி கேட்ட போது, 50 லட்சம் ரூபாய் மட்டுமே திருப்பித் தந்ததாகவும், மீதமுள்ள தொகையை தராமல் இழுத்தடித்ததாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போது சி. விஜயபாஸ்கர், ஆளும் தவெக-வில் இணைந்துள்ள நிலையில், பணத்தை திருப்பி கேட்ட போது மிரட்டல் விடுத்ததாகவும், இதுசம்பந்தமாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார். தனது புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை தரப்பில், இதுதொடர்பாக மனுதாரர் அளித்துள்ள புகார் மீது ஆரம்பக் கட்ட விசாரணை தொடங்கியுள்ளது. மனுதாரரை வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 15-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து, அன்றைய தினம் விசாரணையின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை காவல்துறை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
High Court orders police to submit report by Sept. 15 over former Minister C. Vijayabaskar facing allegations of cheating and failing to return Rs. 4 crore taken on the promise of securing an assembly election seat.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.