Politics
மாஜி மீதான மோசடி புகாரில் ஆரம்ப விசாரணை தொடக்கம்: ஐகோர்ட்டில் போலீஸ் தகவல்

சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட 'சீட்' பெற்று தருவதாக வாங்கிய 4 கோடி ரூபாயை திருப்பித் தராமல் ஏமாற்றியதாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிரான புகார் குறித்து, ஆரம்ப கட்ட விசாரணையை தொடங்கி உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்த தனவிமல் என்பவர் தாக்கல் செய்த மனு:
சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் ஆலங்குடி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்தேன்.
இது பற்றி, என்னை தொடர்பு கொண்ட அப்போதைய மாவட்டச் செயலர் சி.விஜயபாஸ்கர், தேர்தல் செலவுகளை கையாளும் தகுதியை நிரூபிக்க, 5 கோடி ரூபாய் தருமாறு வலியுறுத்தினார்; வேட்பாளர் பட்டியல் அறிவிப்புக்கு பின், பணத்தை திருப்பித் தந்து விடுவதாக உறுதி அளித்திருந்தார்.
அதன்படி, 4.50 கோடி ரூபாயை திரட்டி, விஜயபாஸ்கர் குறிப்பிட்ட ஒப்பந்ததாரர் சோத்துப்பாலை முருகேசன் என்பவரிடம் கொடுத்தேன்.
வேட்பாளர் பட்டியலில் என் பெயர் அறிவிக்கப்பட்ட பின், தேர்தல் செலவுகளுக்கான பணத்தை திரும்ப கேட்டபோது, 50 லட்சம் ரூபாய் மட்டுமே திருப்பி தந்தனர்; மீதியை தராமல் இழுத்தடித்தனர்.
விஜயபாஸ்கர் தற்போது ஆளுங்கட்சியான த.வெ.க.,வில் இணைந்து விட்டார். என் பணத்தை கேட்டபோது, மிரட்டல் வருகிறது. இது பற்றி, புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் அளித்தேன்; இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, என் புகாரின் மீது வழக்குப்பதிவு செய்ய, போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல் துறை தரப்பில், புகார் மீது, ஆரம்ப கட்ட விசாரணை தொடங்கியுள்ளதாகவும், மனுதாரரை வரும் 10ம் தேதி விசாரணைக்கு ஆஜராக, 'சம்மன்' அனுப்பப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதி, விசாரணையை வரும் 15ம் தேதிக்கு தள்ளிவைத்ததோடு, அன்றைய தினம் விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்கை அளிக்க, காவல் துறைக்கு உத்தரவிட்டார்.