Politics
சி.விஜயபாஸ்கர் மீது மோசடி புகார்: ஆரம்பகட்ட விசாரணை தொடக்கம்.. ஐகோர்ட்டில் காவல்துறை தகவல்!

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிரான 4 கோடி ரூபாய் மோசடி புகார் மீது ஆரம்பக்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளதாக, காவல் துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்த தனவிமல் தாக்கல் செய்துள்ள மனுவில், சட்டமன்ற தேர்தலில், கரூர் மாவட்டம், ஆலங்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்த தன்னை தொடர்பு கொண்ட முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தேர்தல் செலவுகளை மேற்கொள்ளும் தகுதியை நிரூபிக்க 5 கோடி ரூபாய் தரும்படி வலியுறுத்தியதாகவும், வேட்பாளர் பட்டியல் அறிவித்ததும் பணத்தை திருப்பித் தந்து விடுவதாக உறுதியளித்ததாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
அதன்படி, 4 கோடியே 50 லட்சம் ரூபாயை திரட்டி, சி.விஜயபாஸ்கர் குறிப்பிட்ட ஒப்பந்ததாரர் சோத்துப்பாலை முருகேசன் என்பவரிடம் கொடுத்ததாகவும், வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் அறிவிக்கப்பட்ட பின், தேர்தல் செலவுகளுக்காக பணத்தை திருப்பி கேட்ட போது, 50 லட்சம் ரூபாய் மட்டுமே திருப்பி தந்ததாகவும், மீதமுள்ள தொகையை தராமல் இழுத்தடித்ததாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போது சி.விஜயபாஸ்கர், ஆளும் தவெக-வில் இணைந்துள்ள நிலையில், பணத்தை திருப்பி கேட்ட போது மிரட்டல் விடுத்ததாகவும், இதுசம்பந்தமாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார். தனது புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையும் படிங்க: தீபாவளி முன்பதிவு.. சில நிமிடங்களில் விற்றுதீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்.. பயணிகள் ஏமாற்றம்!
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், மனுதாரர் அளித்துள்ள புகார் மீது ஆரம்பக் கட்ட விசாரணை துவங்கப்பட்டுள்ளது. மனுதாரரை வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்டு, விசாரணையை செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்றைய தினம் விசாரணையின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை காவல்துறை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
