Lifestyle and human interest
ஹவுதி - சவுதி அரேபியா மாறி மாறி தாக்குதல்: மேற்காசியாவில் தொடரும் போர் பதற்றம்
ஏமனில் 1.25 லட்சம் மக்கள் வெளியேறினர் கெய்ரோ: ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி பயங்கரவாத அமைப்பு

கெய்ரோ: ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி பயங்கரவாத அமைப்பு மற்றும் சவுதி அரேபியா, மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனால், ஏமனில் இருந்த, 1.25 லட்சத்துக்கும் அதிகமானோர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் மீதான அமெரிக்கா நடத்தி வந்த போர் தற்போது சற்று தணிந்துள்ளது. இருப்பினும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
போரின்போது, மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வந்தது. இதுவும் சற்று தணிந்துள்ளது. இதனால், கடந்த ஆறு மாதங்களாக மேற்காசியா பிராந்தியத்தில் போர் பதற்றம் நீடித்து வந்தது.
இந்நிலையில், மேற்காசிய நாடான ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி பயங்கரவாத அமைப்புக்கும், சவுதி அரேபியா ஆதரவு பெற்ற ஏமன் அரசு படைகளுக்கும் இடையே சமீபத்தில் மோதல் வெடித்தது.மோதலில் முன்னேற்றம் கண்ட ஹவுதி அமைப்பினர், ஏமனின் முக்கிய துறைமுக நகரமான மோச்சாவை கைப்பற்றினர். மேலும், செங்கடல் பகுதியில் உள்ள பாப் எல் மாண்டேப் ஜலசந்தி மற்றும் அதனை சுற்றியுள்ள தீவுகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
மோச்சா துறைமுக நகரம், சவுதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. இதையடுத்து, ஹவுதி படையினரிடம் இருந்து இப்பகுதிகளை கைப்பற்ற ஏமன் அரசு படைகளுடன் இணைந்து சவுதி வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சவுதி அரேபியாவின் ராணுவ மற்றும் நகர்பகுதிகளை குறி வைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை ஹவுதி மேற்கொண்டது. நேற்று சவுதி அரேபியாயின் காமிஸ் முஷைத், அப்கா மற்றும் தாயிப் ஆகிய மூன்று நகரங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 13 பேர் காயமடைந்ததாகவும், ஏழு வீடுகள், இரண்டு வாகனங்கள் சேதமடைந்ததாகவும் சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலடியாக, சவுதி அரேபியா தலைமையிலான கூட்டு படை, ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மற்றும் ஏமன் மேற்கு பகுதிகளில் கடுமையான வான்வழி தாக்குதலை நடத்தியது. இரு தரப்பிலிருந்து மாறி மாறி தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். ஏமனின் செங்கடல் மற்றும் மிக முக்கியமான கடல்வழி பாதைகளை ஒட்டியுள்ள முக்கிய பகுதிகளில் தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளது.
மோதல் தீவிரமடைந்து வருவதையொட்டி, இம்மாத தொடக்கத்தில் இருந்து ஏமனில், 18,000 குடும்பங்களைச் சேர்ந்த, 1.25 லட்சம் பேர், உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்துள்ளதாக, ஐ.நா.,வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.