Lifestyle and human interest
செங்கடலில் மேலும் இரு தீவுகளை கைப்பற்றியது ஹவுதி கிளர்ச்சி படை
கெய்ரோ: ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், தெற்கு செங்கடல் பகுதியில் மேலும் சில முக்கிய தீவுகளை
ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், தெற்கு செங்கடல் பகுதியில் மேலும் சில முக்கிய தீவுகளை கைப்பற்றி கப்பல் போக்குவரத்து பாதை மீது தங்கள் பிடியை இறுக்கியுள்ளனர்.
மேற்காசிய நாடான ஏமனில் சவுதி ஆதரவு பெற்ற அரசுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர் படைக்கும் இடையே நீண்ட காலமாக உள்நாட்டு போர் நீடித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சற்று தணிந்திருந்த இந்த உள்நாட்டு மோதல், ஈரான் – அமெரிக்க இடையேயான போருக்கு பின் மீண்டும் தலைதுாக்க ஆரம்பித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்திக்கு மாற்றாக விளங்கும் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்து பாதையான ‘பாப் அல் – மாண்டேப்’ ஜலசந்தியை சுற்றியுள்ள பகுதிகளில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சமீபத்தில் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், சவுதி ஆதரவு பெற்ற ஏமன் அரசு படைகள் பின் வாங்கின. இதையடுத்து, முக்கிய துறைமுக நகரமான மோச்சாவை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். இது தவிர, பெரீம் மற்றும் ஜுகர் தீவுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
ஹவுதி கிளர்ச்சியாளர்களிடம் இருந்து அப்பகுதிகளை மீட்க, அரசு படைகளும், ஏமன் – சவுதி கூட்டுப்படையும் இணைந்து தொடர்ந்து தாக்குதல் நடத்தின. இம்மோதல்களுக்கு இடையே கிரேட்டர் ஹனிஷ் மற்றும் லெஸ்ஸர் ஹனிஷ் என்ற இரு தீவுகளையும் கைப்பற்றி, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் பிடிக்குள் கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம், ஏமனின் செங்கடல் கடற்கரை பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள தீவுகள் முழுதும் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுள்ளது. இதனால், உலகின் மிக முக்கிய கப்பல் போக்குவரத்து பாதை மீது ஹவுதி கிளர்ச்சியாளர்களின் பிடி இறுகி வருகிறது.