Arts, culture, entertainment and media
இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
ஈரோடு:டி.என்.பாளையம் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும், வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில், தடப்பள்ளி கிராமத்தில் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி நடந்தது.
வேளாண் அலுவலர் ஆனந்தி, தலைமை வகித்து துவக்கி வைத்து, இயற்கை விவசாயம் செய்வதன் மூலம் மண் வளம் பாதுகாப்பதுடன், இடுபொருள் செலவுகளை குறைத்து, தரமான உற்பத்தியை பெற முடியும் என தெரிவித்தார். வட்டாரத்தில் வேளாண் துறை மூலம் செயல்படுத்தி வரும் மத்திய, மாநில அரசின் மானிய திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.
தோட்டக்கலை அலுவலர் சவிதா, தோட்டக்கலை துறை மூலம் செயல்படுத்தப்படும் மத்திய, மாநில அரசின் மானிய திட்டங்கள், மஞ்சள், வாழை, காய்கறி பயிரிடும் உழவர்களுக்கு வழங்கப்படும் மானிய திட்டங்கள், நுண்ணீர் பாசன மானிய திட்டங்கள், பயிர் காப்பீடு திட்டம் குறித்து விளக்கினார்.
ஓய்வு பெற்ற துணை இயக்குனர் மாரியப்பன், இயற்கை விவசாயம் குறித்தும், உயிர் உரங்கள், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், இனக்கவர்ச்சி பொறிகள், ஒட்டுண்ணி ஆகியவற்றின் பயன்கள் குறித்தும், மண் வளம் பாதுகாப்பு குறித்து பேசினார். காசிபாளையம், சிங்கிரிபாளையம் பகுதி விவசாயிகள் பயிற்சி பெற்றனர்.