Lifestyle and human interest
நாட்டுக்கும் மக்களுக்கும் நற்தொண்டு செய்கிறது: காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசி

சென்னை: வாசகர்களிடம் தனி மதிப்பை பெற்றுள்ளது, 'தினமலர்' நாளிதழ் என, காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்துஉள்ளார்.
'தினமலர்' நாளிதழ் பவள விழாவை முன்னிட்டு, அவர் வழங்கிய ஆசியுரை:
'தினமலர்' நாளிதழ், 75 ஆண்டுகளை பூர்த்தி செய்திருப்பது, வாசகர்களிடம் தனி மதிப்பு பெற்றிருப்பதையே காட்டுகிறது. தினமும் மலர்களை கொண்டு ஈசனை போற்றுகிறோம். 'தினமலர்' மக்கள் போற்றும் விதத்தில் அமைந்து உள்ளது.
கல்வி, ஆன்மிகம், அரசியல், மக்கள் பிரச்னைகள், உலக நிகழ்வுகள், விளையாட்டு, வணிகம், ஆரூடம் போன்று, அனைத்து செய்திகளையும், 'தினமலர்' தன்னுள் கொண்டுள்ளது.
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பதற்கு ஏற்ப, நாட்டிற்கும் மக்களுக்கும் நற்தொண்டு செய்து வருகிறது.
தினசரி பஞ்சாங்கம், மார்கழி மாதத்தில் ஒவ்வொரு நாளும் திருப்பாவை, திருவெம்பாவை அதன் பொருளுரை, கும்பாபிஷேகங்கள், கோவில் உத்சவ நிகழ்ச்சிகளை படங்களுடன் செய்திகளாக, 'தினமலர்' வெளியிட்டு வருகிறது.
கிராம மற்றும் மாவட்ட வாரியாக பலவிதமான செய்திகளை கொண்டு சேர்ப்பதுடன், மக்களின் குறைகளை தீர்க்கவும் உதவியாக இருந்து வருகிறது. மாணவர்கள் தேர்வுகளை தைரியமாக எதிர்கொள்ளும் விதமாக, ஒவ்வொரு மாவட்டத்திலும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்நிகழ்ச்சிகளில் நல்லுரைகளும் இடம்பெறுகின்றன.
எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன், டி.வி.ராமசுப்பையர் தொடங்கிய, 'தினமலர்' ஆலமரத்தின் விழுதுகள் தரையில் ஊன்றி தாங்கி நிற்பது போல், அன்னாரின் புத்திரர்களின் வாயிலாக எழுத்திலும், எண்ணங்களிலும் காலத்திற்கேற்ப மாற்றங்களுடன் முக்கிய நகரங்களிலும் பரவி, அனைத்து மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது.
'தினமலர்' நாளிதழின் செய்தி தொடர்பு தொண்டு மென்மேலும் வளர்ந்து, தொடர்ந்து நடக்க, ஸ்ரீ மகாதிரிபுரசுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வர சுவாமி கிருபையுடன் ஆசிர்வதிக்கிறோம்.
இவ்வாறு சுவாமிகள் கூறியுள்ளார்.