Lifestyle and human interest
“பத்திரிகை நடத்துவதே கடினம்; அதை நடுநிலையோடு நடத்துவது அதைவிடக் கடினம்” - குடியரசுத் துணைத் தலைவர்!

பிரபல தமிழ் பத்திரிகை ஒன்றின் 75ஆம் ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு, சிறப்பு அஞ்சல் தலை வெளியீட்டு விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (05.09.2026) நடைபெற்றது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ஒரு பத்திரிகை நடத்துவதே கடினம். அந்தப் பத்திரிகையை நடுநிலையோடு நடத்துவது அதைவிடக் கடினம்.
75 ஆண்டு காலம் ஓயாமல் உண்மையின் குரலாய் ஒலிப்பது என்பது நடைமுறையில் எவ்வளவு கடினம் என்பது எல்லோருக்கும் அறிந்த ஒன்றுதான். ஆனால், அப்படி உரைக்கின்றபோதுதான் அந்த உழைப்பு வரலாறாக மாறுகிறது. அந்தப் பவள விழா வரலாற்றில் இன்றைக்கு சிறப்பு தபால் தலையை வெளியிட்டு, உங்களோடு என்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன். ‘காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீதான், இந்தப் பாரிடை துயில்வோர் கண்ணில் பாய்ந்திடும் எழுச்சி நீதான், ஊரினை, நாட்டை, இந்த உலகினை ஒன்றுசேர்க்க, பேரறிவாளர் நெஞ்சில் பிறந்த பத்திரிகைப் பெண்ணே’ என்று பத்திரிகையைப் போற்றிப் பாடுகிறார் தேசக்கவி மகாகவி பாரதி” எனத் தெரிவித்தார்.
இந்த விழாவில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தருமபுரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி, பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி, முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)