Politics
த.வெ.க., வேட்பாளர்கள் தேர்வு: அமைச்சர் ஆனந்திடம் ஒப்படைப்பு

சென்னை: இடைத்தேர்தலில் போட்டியிடும், த.வெ.க., வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பை, அமைச்சர் ஆனந்திடம், முதல்வர் விஜய் ஒப்படைத்துள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு, வரும் அக்., 6ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க., வேட்பாளர்கள் தேர்வு தீவிரமாக நடைபெறுகிறது.
த.வெ.க., வேட்பாளர்கள் தேர்வு தொடர்பாக, சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், கட்சி தலைவரான முதல்வர் விஜய், நேற்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது, பதவியை ராஜினாமா செய்து விட்டு, த.வெ.க.,வில் இணைந்த இரு முன்னாள் எம்.எல்.ஏ.,க்களில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்க, முடிவு செய்ததாக தெரிகிறது.
ஆனால், இருவருக்கும் வாய்ப்பு வழங்குமாறு, அவர்களை, அ.தி.மு.க.,வில் இருந்து த.வெ.க.,வுக்கு அழைத்து வந்த அமைச்சர் ஒருவர் கூறியதால், த.வெ.க., வேட்பாளர்களின் பெயர்கள் இறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில், முதல்வர் விஜய் இன்று லண்டன் செல்கிறார். எனவே, வேட்பாளரை தேர்வு செய்து அறிவிக்கும் பொறுப்பு, த.வெ.க., பொதுச்செயலரான அமைச்சர் ஆனந்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. த.வெ.க., வேட்பாளர் பட்டியல் இன்று அல்லது வரும் 14ம் தேதி வெளி யாகும் என தெரிகிறது.