காதலியை பார்க்க சென்ற காதலன்.. கொதிக்கும் எண்ணையை ஊற்றிய தாய்.. முகம் கருகிய இளைஞருக்கு தீவிர சிகிச்சை

காவேரிப்பாக்கம் அருகே காதலியை பார்க்கச் சென்ற லோகேஷ் கண்ணன் முகத்தில், காதலியின் தாய் தமீம் கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே காதலியை பார்க்க சென்ற காதலனின் முகத்தில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உத்திரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தமீம் என்ற பெண் கணவனை இழந்து வாழ்ந்து வருகிறார். இவர் தனது மகன் மற்றும் 18 வயது மகளுடன் காவேரிப்பாக்கம் முத்தீஸ்வரர் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகளும், ஒச்சேரி அருகே ஆயர்பாடி ரோட்டு தெருவைச் சேர்ந்த 19 வயதான லோகேஷ் கண்ணனும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் லோகேஷ் கண்ணன், இரவு தனது காதலியை பார்க்க காவேரிப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, காதலியின் தாயார் தமீமிடம் அவரது மகளை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு லோகேஷ் கண்ணன் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தமீம், சமையலறைக்கு சென்று எண்ணையை காயவைத்து, கொதிக்கும் எண்ணையை லோகேஷ் கண்ணன் மீது ஊற்றியதாக கூறப்படுகிறது.
இதில் லோகேஷ் கண்ணனின் முகம், கழுத்து மற்றும் மார்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் அவர் அலறிய நிலையில், அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு லோகேஷ் கண்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக லோகேஷ் கண்ணன் காவேரிப்பாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தமீமை கைது செய்தனர். மகளை திருமணம் செய்து தரக்கேட்ட காதலன் மீது தாய் கொதிக்கும் எண்ணையை ஊற்றிய சம்பவம் காவேரிப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
