Religion
கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்
ஆண்டிபட்டி, செப்.5- மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஆண்டிபட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டி, ஸ்ரீநவநீதகிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. முதல் நாளில் சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தது. கிருஷ்ணர் ராதை வேடம் அணிந்து வந்த 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. கோயில் வளாகத்தில் பரதநாட்டியம், கோலாட்டம், பஜனை நிகழ்ச்சிகள் நடந்தன. நள்ளிரவு 1:05 மணிக்கு ஸ்ரீ கிருஷ்ணர் பிறப்பு நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டன. 2 ம் நாள் கோயில் வளாகத்தில் நடந்த பஜனை நிகழ்ச்சிக்குப்பின் பெண்கள் முளைப்பாரியுடன் நவநீத கிருஷ்ண சுவாமி ஊர்வலம் நடந்தது. நிறைவாக பெண்கள் திருவிளக்கு பூஜை கூட்டு பிரார்த்தனை நடந்தது. விழா ஏற்பாடுகளை நாயுடு சங்க தலைவர் பால்பாண்டி தலைமையில் சமூக தலைவர் கண்ணபிரான், செயலாளர் காமாட்சி, பொருளாளர் காந்தையன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
போடி: போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் மூலவர் சீனிவாசப் பெருமாள் குருவாயூர் கிருஷ்ணர் தங்க கவச அலங்காரம், பெருமாள் சந்தான கோபாலகிருஷ்ணன் அலங்காரத்திலும் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனம் பெற்றனர். குழந்தைகள் கிருஷ்ணன் வேடம் அணிந்து வந்து பெருமாளின் தரிசனம் பெற்றனர். போடி திருமலாபுரம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் சலவை கல்லில் ஆன கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராத னைகள் நடந்தது. குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து வந்தனர்.
கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் யாதவ மகா சபை சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. கோயிலில் எழுந்தருளியுள்ள நவநீதகிருஷ்ணனுக்கு வாசனை திரவியங்களில் அபிஷேகம் நடந்தது. அலங்கார திருமஞ்சனம், விசேஷ பூஜை நடந்தது. பக்தர்கள் கண்ணன் பாடல்கள் பாடினர். துளசி, பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கூடலுார் யாதவ மகா சபையினர் செய்திருந்தனர்.
விஸ்வ ஹிந்து பரிஷத்: கூடலுார் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நகரத் தலைவர் ஜெகன் தலைமையில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. கண்ணன், ராதை வேடமணிந்து வந்த குழந்தைகளுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. கருப்பசாமி அறக்கட்டளை தலைவர் சக்திவேல், லோகநாயகி, கிரிதரன், த.வெ.க., மாவட்ட துணை செயலாளர் செல்வேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





