Politics
தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜாதி சான்று; தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ்

சென்னை: சட்டசபை தேர்தலில், கோவை மாவட்டம் வால்பாறை தனி தொகுதியில், தி.மு.க., சார்பில் குட்டி என்ற சுதாகர் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து, த.வெ.க., சார்பில் போட்டியிட்ட ஸ்ரீதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், 'தி.மு.க., - எம்.எல்.ஏ., தன் வேட்புமனுவில், 'ஹிந்து மதத்தை சேர்ந்த பட்டியல் இனத்தவர்' என, குறிப்பிட்டுஉள்ளார். ஆனால், அவர் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றி வருகிறார்.
அவரது ஜாதி சான்றிதழ் குறித்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டுஉள்ளது.
இந்த மனு, நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது.
இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்க, தமிழக அரசு, தேர்தல் கமிஷன் உள்ளிட்டோருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கில், கோவை மாவட்ட ஜாதி சான்று சரிபார்ப்பு குழுவை, தாமாக முன்வந்து, எதிர்மனுதாரராக சேர்த்ததோடு, விசாரணையை அக்., 6ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.