Politics
வால்பாறை எம்எல்ஏ சாதிச் சான்று விவகாரம்: அரசு, தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
திமுக எம்எல்ஏ சுதாகரின் சாதிச் சான்று குறித்து விசாரிக்க தமிழக அரசு, தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வால்பாறை தனி தொகுதி திமுக எம்எல்ஏ சுதாகரின் சாதிச் சான்று குறித்து விசாரணை நடத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசு, தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் வால்பாறை தனி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட குட்டி என்கிற சுதாகர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், அவரை எதிர்த்து தவெக சார்பில் போட்டியிட்ட ஸ்ரீதரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், திமுக எம்எல்ஏ தனது வேட்புமனுவில் இந்துமதத்தைச் சேர்ந்த பட்டியல் இனத்தவர் என குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், கிறிஸ்தவ மதத்தை அவர் பின்பற்றி வருகிறார். இதனால், பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதியில் போட்டியிட சட்டப்படி அவருக்கு உரிமை இல்லை. அவரது சாதி சான்றிதழ் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, தமிழக அரசு, தேர்தல் ஆணையம், திமுக எம்.எல்.ஏ. சுதாகர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டார்.
