Politics
திடீர் மாரடைப்பு.. பயணிகளை பத்திரமாக காப்பாற்றிவிட்டு உயிரிழந்த அரசு பேருந்து ஓட்டுநர்.. குடியாத்தம் அருகே சோக சம்பவம்

குடியாத்தம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநர் வெங்கடசாமி, மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும் 25 பயணிகளை பத்திரமாக காப்பாற்றிவிட்டு உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே 25 பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்தின் ஓட்டுநர், திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், பயணிகளை பத்திரமாக காப்பாற்றிவிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேரணாம்பட்டிலிருந்து வியாழக்கிழமையன்று காலை 8 மணியளவில் சுமார் 25 பயணிகளுடன் அரசுப் பேருந்து காட்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தது. ஓட்டுநர் வெங்கடசாமியும், நடத்துநர் அன்பழகனும் பணியில் இருந்தனர்.
குடியாத்தம் புதிய புறவழிச் சாலையில் கங்கை அம்மன் கோயில் பாலம் அருகே சென்றபோது, ஓட்டுநர் வெங்கடசாமிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பேருந்தில் இருந்த பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, வலியையும் பொருட்படுத்தாமல் பேருந்தை சாலையோரமாக பத்திரமாக நிறுத்தியுள்ளார்.
அதன்பின்னர் அவர் மயங்கி விழுந்த நிலையில், பயணிகளும் பொதுமக்களும் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி வெங்கடசாமி உயிரிழந்தார். 25 பயணிகளின் உயிரை காப்பாற்றிவிட்டு அரசுப் பேருந்து ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
