Politics
“கேடுகெட்ட ஆட்சியாக இந்த த.வெ.க. ஆட்சி உள்ளது” - கனிமொழி எம்.பி. காட்டம்!

மதுரை மாவட்டம் ஆனையூரைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன் கடந்த 6ஆம் தேதி காணாமல் போனார். அதன் பின்னர் கூடல்புதூர் பகுதியில் உள்ள ஒரு கண்மாயில் மர்மமான முறையில் உயிரிழந்த முறையில் மீட்கப்பட்டார். இதனையடுத்து உடற்கூறு ஆய்வில் மாணவன் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதாகக் கூறப்படும் சூழலில், இதனை ஆணவக் கொலை கோணத்திலும், முறையான கொலை வழக்காகப் பதிவு செய்தும் விசாரிக்கக் கோரி அவரது குடும்பத்தினர் பல்வேறு தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ஒன்பது நாட்களாக உடலை வாங்க மறுத்து வந்த நிலையில், இன்று (செப்டம்பர் 14) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பெண்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர். இந்தக் கைது நடவடிக்கை மற்றும் காவல்துறையின் அணுகுமுறைக்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மாணவன் தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடும் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மீது காவல்துறையை ஏவி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது தவெக அரசு. உடற்கூறு ஆய்வில் அம்மாணவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், குற்றத்தை விசாரித்து உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டிய காவல்துறை, நீதி கேட்கும் மக்களை கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது. குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்கிவிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையே ஒடுக்கும் கேடுகெட்ட ஆட்சியாக இந்த தவெக ஆட்சி உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)