வரையாடுகள் நடமாட்டம் சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை
வால்பாறை: வால்பாறை மலைப்பாதையில் வரையாடுகள் நடமாடுவதால், சுற்றுலாபயணியர் தங்களது வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும் என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் வால்பாறை அமைந்துள்ளது. இங்குள்ள மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய இரு வனச்சரகங்களிலும், புலி, யானை, சிறுத்தை, காட்டுமாடு, கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன.
இது தவிர, உலகின் அரிய வகை வனவிலங்குகளில் ஒன்றான வரையாடு, சிங்கவால்குரங்குகள் வால்பாறை மலைப்பகுதியில் அதிக அளவில் உள்ளன.
இந்நிலையில், ஆழியாறு அணையிலிருந்து வால்பாறை மலைப்பகுதிக்கு செல்லும் ரோட்டில் வரையாடுகள் அதிக அளவில் உள்ளன.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வால்பாறை மலைப்பாதை ரோட்டில் வரையாடுகள் நடமாடுவதால், தொடர்விடுமுறையில் வால்பாறைக்கு வரும் சுற்றுலாபயணியர் தங்களது வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும். வாகனங்களை நடுரோட்டில் நிறுத்தவோ, வரையாடுகளை போட்டா எடுப்பதோ, செல்பி எடுக்கவோ, வரையாடுகளை துன்புறுத்தவோ கூடாது. மிறினால் வன உயிரினபாதுகாப்பு சட்டப்படி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.