யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு வனத்தில் விறகு தேட தடைவிதிப்பு
வால்பாறை: எஸ்டேட் பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், வனத்தில் தொழிலாளர்கள் விறகுதேட செல்வதை தவிர்க்க வேண்டும் என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வால்பாறை மலைப்பகுதியில் பருவ மழைக்கு பின் வனவளம் பசுமையாக இருப்பதால் நுாற்றுக்கணக்கான யானைகள், ைஹபாரஸ்ட், பன்னிமேடு, முருகாளி, புதுத்தோட்டம், சேலையாறு சிலுவைமேடு, நடுமலை உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட்களில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.
எஸ்டேட் பகுதியில் முகாமிட்ட யானைகள், பகல் நேரத்தில் தண்ணீர் மற்றும் உணவு தேடி ரோட்டை கடக்கின்றன. சில எஸ்டேட் பகுதியில் தேயிலை காட்டிலும் பகல் நேரத்தில் முகாமிடுகின்றன.
வனத்தில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், சுற்றுலாபயணியர் அத்துமீறி வனத்தில் நுழையக்கூடாது. அதே போல் எஸ்டேட் தொழிலாளர்கள் யானைகள் நடமாடும் பகுதியில் விறகு தேட செல்வதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பருவமழைக்கு பின் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. பகல் நேரத்திலய யானைகள் ரோட்டை கடக்கும் என்பதால், வாகன ஓட்டுனர்கள் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும். யானைகள் முகாமிட்டுள்ள பகுதியில் எஸ்டேட் நிர்வாகங்கள் தொழிலாளர்களை தேயிலை பறிக்க அனுமதிக்கக்கூடாது. யானைகள் நடமாட்டம் பகுதியில் இரவு நேரத்தில் மக்கள் தனியாக நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும். வனத்திற்குள் சுற்றுலாபயணியர் அத்துமீறி நுழைவதை தடுக்க வேண்டும்’ என்றனர்.