Politics
கொளத்தூர் எம்எல்ஏ வி. எஸ். பாபுவின் உடல் நிலை சீராக உள்ளது... மருத்துவமனை தரப்பில் தகவல்!

கொளத்தூர் எம்எல்ஏ வி. எஸ். பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது. மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி. எஸ். பாபுவின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக பேசுபொருளானது முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தோல்வி. கொளத்தூர் தொகுதியின் எம்எல்ஏவாக மூன்று முறை இருந்தவர் மு.க.ஸ்டாலின். அவர் தோல்வி எதிர்பாராத ஒன்றாக அமைந்தது. ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு வென்றது திமுகவில் அவருடன் பயணித்த வி.எஸ் பாபு. 2006 சட்டப்பேரவை தேர்தலிலேயே புரசைவாக்கம் தொகுதியில் வி.எஸ் பாபு திமுக சார்பில் போட்டியிட்டவர்.
அதன்பின் தமிழகம் வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு அதில் இணைந்த வி.எஸ் பாபு கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். அதன்படி ஸ்டாலினை விட கிட்டத்தட்ட 8 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். தொடர்ந்து வெற்றிக்கு பிறகு வி.எஸ் பாபு காட்டிய சைகை இணையதளங்களில் அதிகம் கவனம் பெற்றது.
அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்த வி.எஸ் பாபு இன்று காலை மூச்சுதிணறல் காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை வழங்கி கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகியது. இதனிடையே, வி. எஸ். பாபுவின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வி. எஸ். பாபு தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள பல்துறை நிபுணர்கள் குழுவின் பராமரிப்பில் உள்ளதாகவும் மருத்துவ ரீதியாகத் தேவைப்படும் சுவாச ஆதரவு அவருக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றும் மருத்துவமனை கூறியிருக்கிறது. சிகிச்சையின் மூலம் அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்றும் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் மருத்துவ மேற்பார்வையின் கீழ் இருந்து வருகிறார் எனவும் கூறப்பட்டிருக்கிறது.
