Religion
3 மாநகராட்சிகள், 20 நகராட்சிகளின்அலுவலர், பணியாளருக்கு மாற்றுப்பணி மீனாட்சி கோயில் கும்பாபிஷேகத்திற்காக ஒதுக்கீடு
மதுரை: மதுரையில் இன்று (செப்.,17) நடக்கும் மீனாட்சி கோயில் கும்பாபிஷே கப் பணிக்காக 3 மாநகராட்சிகள், 20 க்கும் மேற்பட்ட நகராட்சிகளை சேர்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் என 1200க்கும் மேற்பட்டோருக்கு மாற்றுப்பணி ஒதுக்கி நகராட்சி நிர்வாகத் துறை உத்தரவிட்டுள்ளது.
இக்கும்பாபிஷேகம் பணிக்காக கோயிலை சுற்றி 20 நாட்களுக்கும் மேலாக அடிப்படை வசதிகளை மாநகராட்சி செய்து வருகிறது. கோயிலை சுற்றி குறுக்குத் தெருக்களிலும் கூட துாய்மைப் பணி மேற்கொள்ள பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 50 லட்சம் பக்தர்கள் வருகை தருவர் என மாநகராட்சி தரப்பில் எதிர்பார்க்கப்படுவதால் அதற்கு ஏற்ப மதுரை மாநகராட்சி பணியாளர்கள் இல்லை.
இதுகுறித்து கமிஷனர் கவுரவ் குமார் நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதன் ரெட்டி கவனத்திற்கு கொண்டு சென்று கூடுதல் அலுவலர்கள் ஒதுக்கீடு செய்ய கேட்டுக்கொண்டார். இதன் அடிப்படையில், தாம்பரம், திண்டுக்கல், சிவகாசி மாநகராட்சிகள், ராமேஸ்வரம், மானாமதுரை, பொள்ளாச்சி, ஒட்டன்சத்திரம், தேவகோட்டை, சின்னமனுார் உட்பட 20 நகராட்சிகளை சேர்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் மாற்றுப் பணிக்கு ஒதுக்கீடு செய்தார்.
நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குநர்கள் இளங்கோவன், முஜ்பூர் ரஹ்மான், அசோக்குமார், சிவக்குமார், மாநகராட்சி துணை கமிஷனர்கள், தலைமை பொறியாளர்கள், நகராட்சி மண்டல இயக்குநர்கள் மதுரையில் முகாமிட்டுள்ளனர். அதிகாரிகளுடன் அந்தந்த மாநகராட்சி, நகராட்சிகளின் பணியாளர்கள் என 1200க்கும் மேற்பட்டோருக்கும் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் என்பதால் இவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவர்கள் நாளை வரை (செப்., 18) பணியில் இருப்பர். குடிநீர் வினியோகம், துாய்மைப் பணிகள் மேற்கொள்வது, தேவைக்கு ஏற்ப பஸ் ஸ்டாண்ட்டுகள், வாகன நிறுத்தங்கள் ஏற்பாடு செய்தல், தற்காலிக நடமாடும் கழிப்பறைகளை பராமரிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான செலவு முழுவதும் மதுரை மாநகராட்சி ஏற்றுள்ளது என்றார்.