Lifestyle and human interest
"சீருடையில் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னால் குற்றமா?''-தூக்கியடிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ்-வெடிக்கும் விவாதம்

இந்தியாவில் அரசுப் பதவிகளில் இருப்பவர்கள் தங்களின் பொதுத் நிகழ்வுகளில் கடைப்பிடிக்க வேண்டிய நடுநிலைமை குறித்துப் பல விவாதங்கள் எழுந்துள்ளன. இந்தச் சூழ்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரி மாணவர்களுக்கு விடுத்த வாழ்த்துச் செய்தியில் இஸ்லாமிய வாழ்த்துச் சொற்களைப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து அவர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இது வழக்கமான நிர்வாக ரீதியிலான இடமாற்றம் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும், இதன் பின்னணியில் வலதுசாரி அமைப்புகளின் அழுத்தம் இருப்பதாகக் கடுமையான விவாதங்கள் எழுந்துள்ளன.
பாஜக தலைமையிலான சுவேந்து அதிகாரி அரசு இயங்கி வரும் மேற்கு வங்க மாநிலத்தில், கடந்த செப்டம்பர் 14 அன்று ஒரு அதிரடி இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காரக்பூர் பகுதியின் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த 2021 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி புஷ்ரா பானோ, அங்கிருந்து மாற்றப்பட்டு மாநில ஆயுதப் படையின் 4-வது பட்டாலியனின் துணை கமாண்டன்ட்டாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக பார்த்தா கோஷ் புதிய கூடுதல் எஸ்பியாகப் பொறுப்பேற்றுள்ளார்.
இந்த இடமாற்றத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, செப்டம்பர் 13 அன்று புஷ்ரா பானோ தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், அலகாபாத் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் குடியிருப்பு பயிற்சி அகாடமி மூலம் தான் யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாரான அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். சவூதி அரேபியாவில் உதவி பேராசிரியராகப் பணியாற்றிவிட்டு இந்தியா திரும்பிய தனக்கு, இந்த அகாடமியின் நூலகம் மற்றும் மாதிரி தேர்வுகள் எவ்வளவு உதவின என்பதை விளக்கி, பிற மாணவர்களையும் இதனைப் பயன்படுத்துமாறு காவல்துறை சீருடையில் இருந்தபடி அவர் ஊக்கப்படுத்தினார்.
ஆனால், இந்த வீடியோவின் உள்ளடக்கத்தை விடுத்து, அவர் பேசிய வார்த்தைகள் பெரிய சர்ச்சையாக்கப்பட்டன. வீடியோவின் தொடக்கத்தில் அஸ்ஸலாமு அலைக்கும் என்றும், உரையின் நடுவே இன்ஷா அல்லாஹ் என்றும், நிறைவில் ஜஸாகல்லாஹ் என்றும் அவர் இஸ்லாமியப் பாரம்பரிய வாழ்த்துச் சொற்களைப் பயன்படுத்தியிருந்தார்.
இதற்கு இந்து லீகல் ஃபண்ட் என்ற அமைப்பு கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தது. அரசுப் பதவியில் சீருடையில் இருக்கும் ஒரு அதிகாரி, நாட்டின் நடுநிலைமையைக் காக்கும் வகையில் பொதுத்தொடர்புகளில் தேசிய அளவிலான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். அவர் 'வந்தே மாதரம் அல்லது 'ஜெய் ஹிந்த்' போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் மதரீதியான வாழ்த்துகளைக் கூறியுள்ளது கண்டிக்கத்தக்கது எனக் கூறி மாநில உள்துறை செயலாளரிடம் அந்த அமைப்பு புகார் அளித்தது.
இதைத் தொடர்ந்து புஷ்ரா பானோ சமூக வலைதளங்களில் வலதுசாரி அமைப்புகளால் குறிவைக்கப்படுவதாகப் பலரும் குற்றம் சாட்டினர். எனினும், முன்னாள் அரசு அதிகாரி ஆஷிஷ் ஜோஷி உள்ளிட்ட பலர் புஷ்ரா பானோவிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர். இந்தியாவின் பலமே அதன் பன்முகத்தன்மையில் தான் உள்ளது என்றும், இருமுறை யுபிஎஸ்சி தேர்வை வென்று, சவூதி அரேபியாவின் சொகுசு வேலையை விட்டுவிட்டு நாட்டிற்குச் சேவையாற்ற வந்த ஒரு அதிகாரியின் தனிப்பட்ட மத நம்பிக்கை அவரது தேசப்பற்றைக் குறைத்துவிடாது என்றும் அவர்கள் வாதிட்டுள்ளனர்.
மேலும், அரசியல் தலைவர்கள் பொதுவெளியில் இந்து மத முழக்கங்களை எழுப்பும் போது வராத நடுநிலைமை, ஒரு சிறுபான்மையின அதிகாரி பேசும்போது மட்டும் ஏன் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் கன்னோஜ் பகுதியைச் சேர்ந்த புஷ்ரா பானோ, இரண்டு குழந்தைகளை வளர்த்துக்கொண்டே, கடுமையான போட்டி நிறைந்த சிவில் சர்வீஸ் தேர்வை இரண்டு முறை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் இந்திய ரயில்வே போக்குவரத்து சேவைக்கும், பின்னர் எஸ்டிஎம் பதவிக்கும் தேர்வாகி, இறுதியாக ஐபிஎஸ் அதிகாரியாகப் பொறுப்பேற்றவர். இந்தத் திறமையான அதிகாரியின் இடமாற்றம் வெறும் நிர்வாக நடைமுறைதான் என்று அரசு கூறினாலும், மத வெளிப்பாடுகளுக்கும் பொது அதிகாரத்திற்குமான எல்லை குறித்த விவாதம் தற்போது புயலைக் கிளப்பியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)