வரலாற்றில் முதன்முறை; முன்னாள் டி.ஜி.பியை சிறைக்கு அனுப்பிய நீதிமன்றம்

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்து தொடர்பான வழக்கில், முன்னாள் டி.ஜி.பி க்கு நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2003 ஜனவரி முதல் 2007 ஜூலை வரையிலான காலகட்டத்தில், கேரளத்தின் முன்னாள் டி.ஜி.பி டோமின் தச்சங்கரி தனது வருமானத்தை விட 135.80% அதிகமாக, அதாவது சுமார் ரூ.64.70 லட்சம் மதிப்பிலான சொத்துக்களைச் சட்டவிரோதமாகச் சேர்த்ததாக ஊழல் தடுப்புப் பிரிவு குற்றம் சாட்டியது.
இதையடுத்து, 2007 ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தச்சங்கரி டி.ஐ.ஜி-யாக இருந்தபோதே அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 2013-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில், முன்னாள் டி.ஜி.பி. டோமின் தச்சங்கரிக்கு வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக, கோட்டயம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.30.84 லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கேரளாவில் டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரிக்கு ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
இந்த வழக்கில், தண்டனையை அறிவிக்கும் போது தனது உடல்நிலையையும் கருத்தில் கொள்ளுமாறு நீதிபதியிடம் தச்சங்கரி கோரிக்கை விடுத்தார். இருப்பினும், அவர் வகித்த பதவியைக் கருத்தில் கொண்டு, அவருக்கு எந்தவித சலுகையையும் வழங்கக் கூடாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)