Politics
புத்தகரத்தில் மழைக்கு சேதமான நெல்மணிகள்: சாலை மறியலுக்கு முயன்ற விவசாயிகள்

வாலாஜாபாத்:புத்தகரத்தில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்காததால், மழைக்கு நெல்மணிகள் சேதமடைந்தன. கொள்முதல் நிலையம் தொடங்காததை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
வாலாஜாபாத் ஒன்றியம், புத்தகரம் கிராமத்தில் சொர்ணவாரி பருவத்திற்கு கிணற்று பாசனம் மூலம் 300 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர்.
அப்பயிர்களை ஒரு மாதமாக விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர்.
அறுவடையான நெல்மணிகளை அப்பகுதியில் வழக்கமாக கொள்முதல் நிலையம் இயங்கும் பகுதியில் விவசாயிகள் குவித்து வைத்துள்ளனர்.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்கியதும் நெல்லை விற்பனை செய்ய காத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 8ம் தேதி இரவு பெய்த கனமழைக்கு விவசாயிகள் குவித்து வைத்திருந்த நெல்மணிகள் மழையில் நனைந்து அடுத்த நாள் முளைப்பு ஏற்பட்டது.
இதனால் கவலை அடைந்துள்ள அப்பகுதி விவசாயிகள், கொள்முதல் நிலையம் தொடங்க அரசு முனைப்பு காட்டாததால் மழையில் நனைந்து நெல் சேதம் அடைந்ததாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இப்பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் உடனடியாக தொடங்க வேண்டும். மழையில் நனைந்து முளைப்பு ஏற்பட்ட நெல்மணிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் எனக்கூறி நேற்று சாலை மறியல் செய்ய முயன்றனர்.
அப்பகுதி ஊராட்சி தலைவர் நந்தகுமார் சம்பவ இடத்திற்கு வந்து, இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக சமாதனம் செய்ததை அடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.