Religion
விநாயகர் ஊர்வலம்! பாதுகாப்பு பணியில் 1,400 போலீசார்... சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிப்பு

திருப்பூர்: திருப்பூர் மாநகரில் நாளை நடக்கும் விசர்ஜன ஊர்வலத்தில் ஆயிரத்து, 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. முக்கிய இடங்களில், 'சிசிடிவி' கேமரா பொருத்தி கண்காணிக்கப்படுகிறது.
ஹிந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்பு, பொதுமக்கள் சார்பில், மாவட்டம், முழுதும், 5 ஆயிரம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்தனர். நேற்று முதல் பிரதிஷ்டை செய்த சிலைகளை விசர்ஜனம் ஊர்வலமாக கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைக்க துவங்கியுள்ளனர்.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, மாநகர போலீசார், சேலம் போலீசார், 200 பட்டாலியன் போலீசார், ஊர்க்காவல் படையினர் என, ஆயிரத்து, 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தயார் நிலையில் உள்ளனர். முக்கிய இடங்களில் 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஊர்வலத்தையொட்டி நகரில் பல இடங்களில் போலீசார் போக்குவரத்து மாற்றத்தை செய்ய உள்ளனர்.
திருப்பூர் மாநகர, மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில், நகரில் மட்டும் ஆயிரத்து, 100 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மூன்று வேளை பூஜை, அன்னதானம், கலை நிகழ்ச்சிகள் என நடந்து வருகிறது. நாளை விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது. புதிய பஸ் ஸ்டாண்ட், தாராபுரம் ரோடு, செல்லம் நகர் ஆகிய, மூன்று இடங்களில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு, முக்கிய ரோடுகள் வழியாக சென்று ஆலாங்காட்டில் நிறைவடைகிறது. தொடர்ந்து, பொதுக் கூட்டம் நடக்கிறது. ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், மாநில பொது செயலாளர் கிஷோர்குமார், மாநில செயலாளர் செந்தில்குமார், சேவுகன் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
திருப்பூர் மாநகரம், அவிநாசி, பல்லடம், உடுமலை என, ஹிந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத், பாரத் சேனா ஹிந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் விசர்ஜன ஊர்வவலம் நடக்கிறது.
ஹிந்து முன்னணி சார்பில் காங்கயத்தில் நேற்று மாலை விசர்ஜனம் ஊர்வலம் நடந்தது. காங்கயம் உடையார் காலனியில் துவங்கிய ஊர்வலத்தை ஹிந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் பாலசந்திரன், காங்கயம் அரிசி ஆலை உரிமையாளர் சங்க தலைவர் துரைராஜ், கிழக்கு மாவட்ட பொது செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் துவக்கி வைத்து பேசினர். மொத்தமாக, 55 சிலைகள் விசர்ஜன ஊர்வலத்தில் கொண்டு செல்லப்பட்டு, கொடுமுடி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது.